க. சண்முகவடிவேல், திருச்சி
திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி,வீட்டுவரி உள்ளிட்டவைகள் கட்டண உயர்வை கண்டித்து, தமிழக முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, அண்ணா சிலை திடலில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப. குமார் தலைமையேற்று கண்டன உரையாற்றியபோது: திமுக தலைவாராக ஸ்டாலின் பாஜகவை எதிர்க்கலாம். ஆனால், தமிழக முதல்வராக எதிர்க்கின்ற காரணத்தினால்தான் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது சொந்த பந்தங்களுக்காகவே ஆட்சி நடத்துகிறார்.
மின் வாரியத்தை சீர்திருத்தம் செய்யுங்கள் – என மத்திய அரசு கூறியதை, மின் உற்பத்தி நிலையங்களை மேம்படுத்தாமல், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது திமுக அரசு. அடுத்த ஆட்சி அதிமுக தான்.. நாடாளுமன்ற தேர்தலிலேயே மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறக்குமதியாக உள்ள விலையே நிர்ணயம் செய்யாத, 5 கோடி ரூபாய் சொகுசு காரில் கே.ன்.நேரு செல்கிறார். அவரது கல்லூரிக்கு கடன்பாக்கி காரணமாக ஜப்தி நோட்டிஸ் அனுப்பிய நிலையில், யார் பணத்தில்? 5 கோடிக்கு கார்.

திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்துநிலையம், திருச்சி மாநகராட்சியின் 50 கோடி மக்கள் வரி பணத்தில், 20 கோடிக்கு கிராவல் மண் நிறப்புவதாக டெண்டர் விடப்பட்டதை மறைத்து, திருச்சி குளங்களில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்களை கொண்டு புதிய பேருந்து நிலையம் கட்ட அடித்தளத்திற்கான மண் நிரப்பப்படுகிறது.
கே.என்.நேருவின் இடங்கள், சொத்துக்கள் புதிய பேருந்துநிலையம் அமைய உள்ள இடத்தை சுற்றி உள்ளது. இவை அதிக விலைபோகும் என்ற கணக்கில் பாதுகாப்பில்லாத பேருந்து நிலையத்தை கொண்டுவரப் பார்க்கிறார். அவரது சுயநலத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் உடந்தையாக, துணைபோகக் கூடாது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசனுக்கு சேவை செய்யத்தான் நேரம் இருக்கிறது. தனது துறையில் எதையும் ஒழுங்காக செய்யவில்லை. போட்ட உத்தரவுகள் அனைத்தும் ஓரிரு நாட்களிலேயே திரும்ப பெறப்படுகிறது. அதனால் தான் அவரை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதற்கு பதிலாக “உத்தரவு வாபஸ் துறை அமைச்சர்” என்று சமூக வலைதளங்களில் அழைக்கின்றனர் என்றார். மேலும், ஸ்டாலின் தனது வறட்டு கவுரவத்திற்காக மத்திய அரசை எதிர்த்து தமிழக மக்களை துன்பப்பட வைக்கிறார் எனப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செ. சின்னச்சாமி, ஆர். சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணப்பாறை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய தொகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“