'இங்கே அனைவரும் வேடிக்கை தான் பார்க்கிறார்கள்' - சிறுவன் கம் ஹீரோ சூர்யாவின் சுளீர் பதில்!

இங்கே யாரும் அடுத்தவர்களுக்கு உதவ முன் வருவதில்லை. ஏதாவது குற்றங்கள் நடந்தால் வேடிக்கைத்தான் பார்க்கிறார்கள்

சென்னையில் நகையை பறித்து சென்ற திருடனை மடக்கி பிடித்த சிறுவன் சூர்யாவை, காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

சென்னை அண்ணாநகரில் மருத்துவர் அமுதா என்பவர் கிளீனிக் வைத்துள்ளார். அவரிடம் இன்று காலை சிகிச்சை பெறுவது போல் வந்த நபர், ‘யாருக்கெல்லாம் நீங்கள் சிகிச்சை செய்வீர்கள்?’ என்று வினவியுள்ளார். அதற்கு மருத்துவர் அமுதா, ‘கர்ப்பிணிகள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை செய்வேன்’ என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து எதையோ சொல்ல வருவதைப் போல் அந்த நபர் அமுதாவின் அருகில் வந்து, சொடக்கு போடும் நேரத்தில் அவர் அணிதிருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார்.

இச்சம்பவத்தை பார்த்த கடையில் வேலை செய்யும் 17 வயது சிறுவன் சூர்யா, திருடனை துரத்தியுள்ளார். கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டர் வரை துரத்திச் சென்று, அவனை மடக்கிப் பிடித்த சூர்யா, அவனிடம் இருந்த தங்கச் சங்கிலியை மீட்டு மருத்துவர் அமுதாவிடம் கொடுத்தார். மேலும் அந்த நபரை காவல்துறையினரிடம் சூர்யா ஒப்படைத்தார்.

அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் ஜானகிராமன் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து இருசசக்கர வாகனம் ஒன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, சிறுவன் சூர்யாவின் மன உறுதியை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் பாராட்டி அவனுக்கு பரிசு வழங்கினார். அப்போது பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், ” சிறுவன் சூர்யாவைப்போல் பொதுமக்கள் அஞ்சாமல் மற்றவர்களுக்கு உதவினால் எந்தத் திருடனும் திருட பயப்படுவான்” என்றார்.

அதன்பிறகு பேசிய சூர்யா, ”நான் அவனை துரத்தும் போதே, திருடன்… திருடன்… என்று குரல் எழுப்பி உதவிக்கு அழைத்தேன். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை. இங்கே யாரும் அடுத்தவர்களுக்கு உதவ முன் வருவதில்லை. ஏதாவது குற்றங்கள் நடந்தால் வேடிக்கைத்தான் பார்க்கிறார்கள். முதலில் அதை நாம் கைவிட வேண்டும். மற்றவர்கள் பிரச்சனையின் போது பயப்படாமல், தயங்காமல் உதவ வேண்டும்” என்றார்.

×Close
×Close