வேளச்சேரியில் ஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்துக் கொலை! வீடுபுகுந்து கொளுத்திய இளைஞர்!

சென்னை வேளச்சேரியில் ஒருதலைக் காதல் காரணமாக இளம்பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்

சென்னை வேளச்சேரியில் ஒருதலைக் காதல் காரணமாக இளம்பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் இந்துஜா. இவரை ஆகாஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். இந்துஜாவின் பள்ளித் தோழனாக ஆகாஷ் இருந்துள்ளார். ஆனால் ஆகாஷின் காதலை இந்துஜா ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்துஜா மீது ஆகாஷிற்கு அதிக கோபம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் உள்ள இந்துஜாவின் வீட்டிற்கு, ஐந்து லிட்டர் பெட்ரோல் கேனுடன் ஆகாஷ் வந்திருக்கிறார். ஆனால், அவரை வீட்டிற்குள் விடாமல் இந்துஜாவின் தாயார் ரேணுகாவும், சகோதரி நிவேதாவும் தடுத்திருக்கின்றனர். ஆனால், அவர்களை தள்ளிவிட்டு உள்ளே சென்ற ஆகாஷ், பெட்ரோலை வீட்டிற்குள் ஆங்காங்கே ஊற்றியிருக்கிறார். இதனால், பயந்து போன இந்துஜா, தனது அறைக்குள் சென்று, கட்டிலுக்கு கீழே மறைவாக இருந்துள்ளார். இதனிடையே, இந்துஜாவின் தாயாரும், சகோதரியும் கூச்சலிட, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வருவதற்குள், ஆகாஷ் தீப்பற்ற வைத்துவிட்டார். இந்துஜாவின் அறையிலும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டார். அறை முழுவதும் எரிந்ததால், இந்துஜா வெளிவர முடியாமல் தீயிலேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாயார், சகோதரி மீதும் ஆகாஷ் தீ வைத்து தப்பித்து சென்றுவிட்டார்.

இதையடுத்து, இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்துஜாவின் தாயார் ரேணுகாவிற்கு 40% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சகோதரி நிவேதாவுக்கு அதற்கும் குறைவாக தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்துஜா தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்திருக்கிறார். ஆனால், கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்துஜாவை ஒருதலையாக காதலித்து, அவரை தீ வைத்து கொன்று தப்பியோடிய ஆகாஷை ஆதம்பாக்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

×Close
×Close