சென்னை பட்டினம்பாக்கத்தில் சீனிவாசபுரத்தில் நேற்று இரவு சையது குலாப் என்ற இளைஞர் மீது 3-வது மாடியின் ஜன்னல் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள ஜன்னல் மேற்கூரை விழுந்ததில் அந்த இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில் அந்த இளைஞரின் உறவினர்கள் சுமார் 300 பேர் சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மக்கள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குலாப் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வீடு அருகே அமைந்துள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வழியில், திடீரென 3வது மாடியில் இருந்த பால்கனி மேற்கூரை உடைந்து அவரது தலை மீது விழுந்துள்ளது.
ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை மீட்டு, அக்கம்பக்கத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில் நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஏற்கனவே சேதமடைந்து இருப்பதாகவும், அதனை உடனடியாக அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் உடனடியாக நேரில் வர வேண்டும் என்றும், அவ்வாறு வரவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“