scorecardresearch

நிலுவைத் தொகை கொடுக்கவில்லை: கோவை மாநகராட்சி அலுவலகம் முன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த தமக்கு நிலுவைத் தொகை கொடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலுவைத் தொகை கொடுக்கவில்லை: கோவை மாநகராட்சி அலுவலகம் முன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மாமன்ற கூட்டம் இன்று (ஜனவரி 30) நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மதியம் 1 மணியளவில் மாமன்ற கூட்ட அரங்கு முன் மனைவி மற்றும் கைக் குழந்தையுடன் வந்த இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த காவலர்கள் துரிதமாக செயல்பட்டு இளைஞரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த டீசல் கேனை வாங்கினர். பின்னர் காவலர்கள் இளைஞரிடம் விசாரித்த போது தான் கோவை குனியமுத்தூரை சேர்ந்த நவீன் என்றும் சுமார் 5 ஆண்டுகளாக மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்ததாகவும், தனக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை கொடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டபோது சரிவர பதில் கூறவில்லை எனவும் அலட்சியமாக நடத்துவதாகவும் பணத்தை கொடுக்க முடியாது என மிரட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், துணை மேயர் உடன் இருக்கும் டேவிட் என்பவர் மீதும் உதவி பொறியாளர் ஒருவர் மீதும் நவீன் குற்றஞ்சாட்டினார். பின்னர் நவீனை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரின் குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் கேட்டபோது அவர்கள் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Young man who try to set himself on fire in coimbatore saved