சென்னை மாம்பலத்தில் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவரை, பெண் காவல் உதவி ஆய்வாளர் மீரா தனது சாதுர்யமான பேச்சால் காப்பாற்றி, பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.
மாம்பலத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தார். கைகளை அறுத்துக்கொண்ட நிலையில், தான் வசிக்கும் கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதிப்பதற்கு அவர் முயற்சி செய்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கீழ்த்தளத்திலிருந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், மாம்பலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் மீரா, துணிச்சலான நடவடிக்கையில் இறங்கினார். உடனடியாக அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்ட மீரா, அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டே, மறுபுறம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்.
ஜன்னல் வழியாகக் குதிப்பதற்கு அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை, மிகுந்த கவனத்துடன் மீட்ட உதவி ஆய்வாளர் மீரா, அவரை உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
காதல் தோல்வியால் உயிரை மாய்க்க முயன்ற இளம்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீராவின் சாதுர்யமான செயலுக்கு, உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.