மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் பத்மபிரியா. சென்னை க்ரீன்வேல்ஸ் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். தினமும் மெட்ரோ ரயிலில் பணிக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று (ஜனவரி 27) பணிக்கு சென்றுள்ளார்.
அண்ணா சாலையில் உள்ள சுரங்கப்பாதை அருகே பத்மபிரியா நடந்து சென்றபோது அருகில் கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து பத்மபிரியாவின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முறையான முன்னறிவிப்பு இல்லாமலும், உரிய பாதுகாப்பு இல்லாமலும் கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், "அண்ணா சாலையில் கட்டடம் இடிப்பு பணிக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற்றனர். ஆனால் மாநகராட்சி பிறப்பித்த பாதுகாப்பு நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றவில்லை. தற்போது கட்டடம் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பாக தனியார் கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காதவாறு மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்" எனத் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/