சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் பிரியா. 17 வயது மாணவியான இவர், கால்பந்து விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர்.
இதன் காரணமாக, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.
தற்போது, சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார்.
இந்தப் பயிற்சியின்போது அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
அப்போது, காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. தொடர்ந்து, கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்தனர்.
இந்த நிலையில் மாணவிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கால் வலியால் அவதியுற்றார். இதையடுத்து அவர் மீண்டும் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் உள்ளன. ஆகவே, காலை அகற்ற வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
மிகுந்த வேதனைக்கு இடையே அவரின் கால்கள் அகற்றப்பட்ட நிலையிலும் அவரது உடல் பிரிந்தது. இந்த நிலையில் அலட்சியமாக செயல்பட்டதாக மருத்துவர் சோமசுந்தர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil