சென்னை அண்ணா சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் நடுஇரவில் கட்டுக்கட்டாக பணத்தை டெபாசிட் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.17.8 லட்சம் ஹவாலா பணம் பணம் சிக்கியது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள இந்தியன் வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் நேற்றிரவு வாலிபர் ஒருவர் வெகுநேரமாக ஏ.டி.எம் இயந்திரத்தில் வெகு நேரமாக பணம் டெபாசிட் செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற திருவல்லிக்கேணி காவல்நிலைய காவலர் துரை, சந்தேகத்தின் பேரில் ஏடிஎம் மையத்திற்குள் சென்று, பணம் டெபாசிட் செய்தவரிடம் விசாரணை நடத்தினார்.
அந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் கட்டுக்கட்டாக 500, 2,000 ரூபாய் நோட்டுக்களாக 17 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது.
இந்நிலையில், உடனே அந்த வாலிபர் காவலரை பிடித்து தள்ளிவிட்டு தப்ப முயன்றார். காவலர் சாமர்த்தியமாக வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் சென்னை மண்ணடி, நயினியப்பன் தெருவை சேர்ந்த ரத்தார் சாகிப்(29) என்பதும், அவர் டெபாசிட் செய்தது ஹவாலா பணம் எனவும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த வைத்திருந்த ஹவாலா பணம் 17 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.