கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இணை நோய் இல்லாத 25வயது இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். அவர் பயம் காரணமாக தடுப்பூசி போடவில்லை என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முகமது கரிமுல்லா என்பவருக்கு டிசம்பர் 26ம் தேதி கோவிட்19ன் டெல்டா வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மறுநாள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 20 நாட்கள் ஐ.சி.யு.வில் உயிருக்கு போராடிய கோவிட் பாதிப்பால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார் என்று தமிழக சுகாதாரத்துறை வெள்ளிகிழமை தெரிவித்தது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் டி சுதாகரன் கூறுகையில், கோவிட் தொற்றால் உயிரிழந்த இளைஞருக்கு சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் எதுவும் இல்லை. ஆனால், அவர் 110 கிலோ எடையுடன் பருமனாக இருந்தார்.” என்று கூறினார்.
மேலும், “அவருக்கு 99% நுரையீரல் தொற்று இருந்தது:” உயிரிழந்த இளைஞருக்கு சிகிச்சையளித்த குழுவில் இருந்த மருத்துவர் கூறினார். அவர் ஏன் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்ற கேள்விக்கு, பயம் காரணமாக அவர் தடுப்பூசி போட வில்லை என்று அவருடைய குடும்பத்தினர் கூறியதாக டாக்டர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவருக்கு ரெம்டெசிவிர் மருத்து அளிக்கப்பட்டதாகவும் டாக்டர் சுதாகரன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஜனவரி முதல் வாரத்தில், ஒமிக்ரான் தொற்றுகள் அதிகரிக்கத் தொடங்கியபோது, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்ட 17 நோயாளிகளில் 11 பேர் தடுப்பூசி போடப்படவில்லை. ஓமந்தூரார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட 10 பேரில் 8 பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை.
சென்னையில் கோவிட் மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கடந்த டிசபர் மாதம் சென்னையில் கோவிட் காரணமாக இறந்தவர்களில் 69% பேர் தடுப்பூசி போடப்படாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"