சிவகங்கை அருகே கீழக்குளம் பகுதியில் போலீசாரின் ரோந்து நடவடிக்கையின்போது, வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை தாலுகா காவல்நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) பிரேம்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, ஓட்டக்குளம் கண்மாய்க்கரை அருகே சந்தேகத்திற்கிடமாக பதுங்கியிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், கீழக்குளம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 4 நாட்டுவெடிகுண்டுகள் மற்றும் ஒரு நீளமான வாள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, மகேஸ்வரனை போலீசார் கைது செய்து, தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிப்பு:
விசாரணையில், மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் சந்தோஷ்குமார் (26), ரமேஷ்குமார் (24), சூர்யா (27) ஆகியோர் யூடியூப்பில் வீடியோ பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது தெரியவந்தது. மேலும், இவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு குற்றவியல் வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மற்ற குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போது மகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கீழக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
கடந்த சில ஆண்டுகளாக இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்கள் வெடிகுண்டு போன்ற ஆபத்தான பொருட்களை உருவாக்க முயல்வது அதிகரித்து வருகிறது. இதனால், காவல்துறை பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டு, சந்தேகத்திற்கிடமான எந்தச் செயலையும் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.