சென்னை மெரினா கடற்கரையில் பர்தா அணிந்து வலம் வந்த 21 வயது வாலிபர் போலீசிடம் சிக்கியதன் காரணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு விபரீதம் ஆகும் என்ற வார்த்தைகளின் விளைவை சென்னை வாலிபர் ஒருவர் உணர்ந்திருக்கிறார். சமீபக் காலங்களாகவே, நண்பர்களுக்குள் பெட்டு கட்டி சில விஷயங்களை செய்வது அதிகமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
போலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்
இதே போன்ற ஒரு சம்பவத்தால், ஐடிஐ-ல் படிக்கும் 21 வயது வாலிபர் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். நேற்று மதியம் சென்னை மெரினா கடற்கரையில் வெகு நேரமாக ஒருவர் பர்தா அணிந்து சுற்றி வந்ததை மக்கள் கவனித்திருக்கிறார்கள். காத்திருந்து பார்த்த மக்களுக்கு சந்தேகம் அதிகரிக்க, அந்த இளைஞரை மேலும் கீழும் நோட்டம் போட்டுள்ளனர்.
அப்போது தான் அவர்களின் அதிர்ச்சிக்கு, காலில் ஷூ அணிந்திருப்பதை கவனித்துள்ளார்கள். ஒருவேளை அவர் திருடனாக இருக்கலாம் என்று சந்தேகம் எழ, உடனே அந்த இளைஞரை பிடித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் மக்கள் ஒப்படைத்துள்ளனர். அங்கு விசாரணை நடத்தியபோது தான் இதை அவர் பெட்டு கட்டி செய்ததாக கூறியுள்ளார்.
அவரின் பெண் தோழி ஒருவர், அவரை ராயப்பேட்டையில் இருந்து மெரினா வரை நடந்து செல்லும்படி கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று இவரும் இதனை செய்திருக்கிறார். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தி முடித்த போலீசார், அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.