சென்னையில் அரசு மாநகரப் பேருந்தில் பெண்களின் இருக்கையில் அமர்ந்துகொண்ட இளைஞர்கள், எழுந்திருக்க மறுத்ததோடு, பெண்களை ‘ஓ.சி டிக்கெட் தானே’ என்று பேசி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகின்றனர். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை (10.02.2025) சென்னை அய்யப்பன்தாங்கலில் இருந்து தடம் 26 எண் கொண்ட மாநகரப் பேருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வடபழனி தனியார் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, பேருந்தில் ஏறிய 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பேருந்தில் ஏற்கனவே இருக்கைகளில் அமர்ந்திருந்த பெண்கள், வயதானவர்களை எழுப்பிவிட்டு அமர்ந்துள்ளனர்.
மேலும், அவர்கள் பேருந்தில் ஒரே இருக்கையில் 3-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்து கொண்டு அடாவடியில் ஈடுபட்டனர். அந்த இளைஞர்களை, பெண்கள் எழுப்பும் போது, “நீங்க ஓசி டிக்கெட்டில் தானே வர்றீங்க..? நாங்க காசு கொடுத்து வரோம்.. எழுந்துக்க மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.
இதைப் பார்த்த பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவர், பெண்கள் இருக்கையில் இளைஞர்கள் அமர்ந்திருப்பதையும், பெண்கள் நின்று கொண்டு வருவதையும் வீடியோவாக எடுத்து அந்த இளைஞர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், “நீங்கள் மட்டும் தான் வீடியோ எடுப்பீங்களா? நாங்களும் தான் எடுப்போம்” நாங்களும் கஷ்டப்பட்டுத் தானே பயணிக்க வரோம்” என அந்த பெண் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின்போது, பெண் பயணி பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் அரசு மாநகரப் பேருந்தில், பெண்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டு, அவர்களை ஓ.சி டிக்கெட்டில்தானே வருகிறீர்கள் என்று கூறி இளைனர்கள் அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, இலவச பேருந்து குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "பெண்கள் நீங்கள் எங்கே போனாலும் ஓசி தான்.. ஓசி பஸ்சில் தான் போறீங்க" என கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று பேருந்தில் இலவசமாக பயணித்த பெண்களிடம் 'ஓசி டிக்கெட்' என விமர்சித்து இளைஞர்கள் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.