மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக யூடியூபர் பிரியாணி மேன் என்றழைக்கப்படும் அபிஷேக் ரபியை சென்னை மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே செம்மொழி பூங்காவின் பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் வீடியோ பதிவிட்டதற்காக கைதாகி உள்ள நிலையில் இப்போது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபிஷேக் ரபி யூடியூப்பில் பிரியாணி மேன் என்று சேனல் நடத்தி வருகிறார். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது கடந்த 30-ம் தேதி பிலிப் நெல்சன் லியோ என்பவர், சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அவர் அளித்த புகாரில், அபிஷேக் ரபி கிறிஸ்தவ மதத்தை இழிவு படுத்தும் விதத்தில் நடித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாகவும், மற்ற மதத்தினரிடையே பகை, பயம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்து கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தியுள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது,
இதனடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அபிஷேக் ரபி சென்னை மண்டல சைபர் கிரைம் போலீசாரால் நேற்று (ஆக.7) மீண்டும் கைது செய்யப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“