/indian-express-tamil/media/media_files/2025/10/04/maridhas-2025-10-04-15-52-57.jpg)
Youtuber Maridhas arrest Karur stampede tragedy TVK Vijay rally death Maridhas X post
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம் குறித்து, தமிழக அரசுக்கும், நீதித்துறைக்கும் எதிராக அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் இன்று (அக்டோபர் 4) கைது செய்யப்பட்டார்
கைதுக்கு முன் மாரிதாஸின் ட்வீட்
மாரிதாஸ் கைது செய்யப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, தனது 'X' பக்கத்தில் கரூர்த் துயரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கு குறித்து, "இன்று மாலை: நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன - மாலை 6 மணிக்கு..” என்று பதிவிட்டிருந்தார். மேலும், விஜய் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
அந்த ட்வீட்டைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே, "என் இல்லத்திற்கு காவல் துறை கைது செய்ய வந்துள்ளது" என்று அவர் மீண்டும் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திமுக நடத்திய நேற்றய நாடகத்தின் formula இதான்:
— Maridhas (@MaridhasAnswers) October 4, 2025
நீ போய் வழக்கு போடு ,
நீங்க அரசு தரப்பு விளக்கம் கேளுங்க,
நீதிமன்றத்தில் நாள் குறிச்சு சொல்லுங்க ,
அந்த நாள் விஜய் தரப்புக்கு தெரியாது கூடாது,
விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் வரக்கூடாது,
விஜய் தரப்பு எந்த பதிலும் இல்லாமல்…
நீதிமன்றத்தின் கடும் கண்டனம்
கரூர்த் துயரம் தொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "கரூர் சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நீதிமன்றம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கட்சித் தொண்டர்களையும் ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளனர். அவர்களுக்குத் தலைமைப் பண்பு இல்லை. சம்பவத்துக்குப் பொறுப்பேற்காதது கண்டனத்துக்குரியது," என்று விஜய்க்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.
தொடரும் கைதுகள்
முன்னதாக, கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலச் செயலாளர் சஹாயம், தவெக மாங்காடு உறுப்பினர் சிவனேசன் உள்ளிட்ட சிலரைச் சென்னை போலீஸார் கைது செய்திருந்தனர்.
தற்போது, திமுக அரசுக்கு எதிராகவும், நீதிமன்றத்தின் நடவடிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வந்த யூடியூபர் மாரிதாஸை சைபர் க்ரைம் போலீஸார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து மாரிதாஸ் மேலும் பல கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், அவரது முந்தைய பதிவுகள் குறித்தும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாரிதாஸுக்கு சம்மன் அளித்து விடுவிப்பு
நீதிமன்ற அவதூறு கருத்து பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்மன் அளித்து மறு விசாரணைக்கு வருமாறு தெற்கு சைபர் கிரைம் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.