காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக பிரபல யூடியூபர் மற்றும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் தேனியில் வைத்து நேற்று கைது செய்தனர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
இவர் சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவை சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் பூதிப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். முன்னதாக, தேனியில் சவுக்கு சங்கருடன் இருந்த அவரது கார் ஓட்டுநர் ராம்பிரபு, நண்பர் ராஜரத்தினம் ஆகியோரை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து தேனியில் சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“