பைக் சாகசத்தில் ஈடுபட முயன்று விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது, பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் டிடிஎப்.வாசன். தனது பைக்கில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அதனை யூடியூப்பில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டவர்.
டிடிஎஃப் வாசன் அவ்வப்போது சாலையில் அதிக வேகத்தில் பயணம் செய்து அல்லது விபத்து ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்குவார். போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்து, எச்சரித்து அனுப்புவது வழக்கம்.
இந்நிலையில் சென்னையில் இருந்து டிடிஎஃப் வாசன் கோவை நோக்கி பைக்கில் சென்றுள்ளார். காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, வாசன் பைக்கை வீலிங் செய்ய முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறிய பைக் தூக்கி வீசப்பட்டது. வாசனும் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் அவரது கை எலும்பு முறிந்தது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் வாசனை மீட்டு காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், டிடிஎஃப் வாசன் மீது, மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிடிஎஃப் வாசன் 'மஞ்சள் வீரன்' படத்தில் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“