/indian-express-tamil/media/media_files/2025/07/12/child-death-2025-07-12-22-10-16.jpg)
தஞ்சாவூர் அருகே கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவேங்கட உடையான்பட்டி கீழத்தெருவை சேர்ந்த செந்தில் மகன் பாலமுருகன் (10), கனகராஜ் மகன் மாதவன் (10), இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர். ஸ்ரீதர் மகன் ஐஸ்வந்த் (8) மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில், செல்லப்பன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள சுந்தமூர்த்தி அய்யனார்கோயில் மண்டலபிஷேகம் விழாவுவில் கிராம மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். இதில் பாலமுருகன், மாதவன், ஐஸ்வந்த் பெற்றோர்களும் கலந்துக்கொண்டு உள்ளனர்.
பிறகு மண்டலபிஷேகம் முடிந்து நேற்று இரவு 10 மணிக்கு வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தைகள் வீட்டுக்கு வெகுநேரமாகியும் வரவில்லை. இதையடுத்து கிராம மக்களுடன் இணைந்து பல இடங்களில் தேடினர். அப்போது மருதக்குடி பிள்ளையார் கோயில் குளத்தில் சிறுவர்கள் குளித்தாக கேள்விப்பட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது குளத்தின் கரையில், ஆடைகள் மற்றும் புத்தகப்பை, செருப்புகள் மட்டுமே கிடந்துள்ளன.
இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் சிலர் குளத்தில் இறங்கி தேடியபோது, சிறுவர்கள் பாலமுருகன், மாதவன், ஐஸ்வந்த் ஆகிய மூவரும் தண்ணீரில் மூழ்கி மயக்க நிலையில் இருந்துள்ளனர். மூழ்கியவர்களை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து மூவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே கிராமத்தில் மூன்று சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருதகுடி குளம் அண்மையில் தூர்வாரப்பட்டது, அப்போது அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததால், குளத்தில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டதால், சிறுவர்கள் குளத்தில் பள்ளம் இருந்தது தெரியாமல் நீரில் மூழ்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது பெற்றோர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.