2024-25-ன் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு புதிய அறிவிப்புகளும், வரி சலுகைகளும் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இறக்குமதி செய்யப்பட்ட மொபைல் போன்கள், மொபைல் பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி (பிசிபிஏ) மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான அடிப்படை சுங்க வரி (பி.சி.டி) 20%-ல் இருந்து 15% ஆக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து, இந்திய மொபைல் போன்துறை வளர்ச்சியடைந்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். நிதியமைச்சர் பேசுகையில், கடந்த 6 ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு அதிகரிப்பு மற்றும் மொபைல் போன்களின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிப்புடன், இந்திய மொபைல் துறை முதிர்ச்சியடைந்துள்ளது.
நுகர்வோர் நலன் கருதி, மொபைல் போன்கள், மொபைல் பிசிபிஏ மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான அடிப்படை சுங்க வரியை (பிசிடி) 15 சதவீதமாக குறைக்க முன்மொழிகிறேன்” என்று மக்களவையில் நிதியமைச்சர் கூறினார்.
பி.சி.டி என்றால் என்ன, அது ஏன் குறைக்கப்பட்டது?
அடிப்படை சுங்க வரி என்பது ஒரு மறைமுக வரியாகும், இது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்படுகிறது மற்றும் இது வழக்கமாக உற்பத்தியின் மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தயாரிப்பின் HSN குறியீடு மற்றும் அது இறக்குமதி செய்யப்படும் நாடு போன்ற காரணிகளைப் பொறுத்து இது பூஜ்ஜியத்திலிருந்து நூறு சதவீதம் வரை மாறுபடும்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTAs) கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பொதுவாக மத்திய நிதி அமைச்சகத்தால் அவ்வப்போது பி.சி.டி-ல் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
எனவே, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பதற்கு வழிவகுக்கும். மொபைல் போன்கள் மற்றும் பிற தொடர்புடைய பாகங்களுக்கான BCD விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்பது செல்போன் தயாரிப்பாளர்களின் நீண்டகால கோரிக்கையாகும், ஏனெனில் இது தொழில்துறைக்குள் போட்டியை அதிகரிக்கும்.
செல்போன் தயாரிப்பாளரான ட்ரான்ஸ்ஷன் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அரிஜீத் தலபத்ரா கூறுகையில், BCD-ன் குறைப்பு அதிக போட்டித்தன்மை கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையை வளர்க்க உதவும். அதோடு மக்களுக்கு குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைக்கத் செய்யும் என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரியில், பேட்டரி கவர், ப்ரெண்ட் கவர், நடுத்தர கவர், மெயின் லென்ஸ், பேக் கவர் மற்றும் பல மொபைல் ஃபோன் பொருட்களுக்கு பிசிடியை 10 சதவீதமாக அரசாங்கம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“