/indian-express-tamil/media/media_files/2025/10/14/mappl-vs-google-maps-2025-10-14-15-07-08.jpg)
கூகுள் மேப்-ஐ ஓரம்கட்டும் இந்தியன் மேப்... துல்லியமான விவரங்கள் தரும் 'மேப்பிள்ஸ்' ஆஃப்!
உள்நாட்டு செயலிகளுக்கு ஆதரவு பெருகி வரும் இச்சூழலில், இந்தியர்களால் இந்திய பிரச்னைகளுக்காகவே உருவாக்கப்பட்ட மேப்மைஇந்தியா (MapmyIndia) நிறுவனத்தின் மேப்பிள்ஸ் (Mappls) செயலி இப்போது பேசுபொருளாகியுள்ளது. ஸ்மார்ட்போன்களில் கூகுள் மேப்ஸ் ஆஃப் ஆதிக்கம் செலுத்தினாலும், கார்கள், பைக்குகள் மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் (OEM) தங்கள் வண்டிகளில் பயன்படுத்தும் மேப்பிங் அமைப்பில், மேப்பிள்ஸ் செயலிதான் இப்போது அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. ராகேஷ்-ரஷ்மி வர்மா ஆகியோரின் இந்த முயற்சி, உலகப் போட்டியாளரை எப்படி எல்லாம் விஞ்சுகிறது என்று பார்ப்போம். மேப்பிள்ஸ், கூகுள் மேப்ஸை விடச் சிறந்து விளங்கும் 5 மிரட்டலான அம்சங்கள் இதோ!
1. மேப்பிள்ஸ் பின்:
யாருக்காவது முகவரியைச் சொல்ல, நீளமான சாலைப் பெயர்கள், அருகில் உள்ள கோயில் எனப் பெரிய பட்டியலைக் கொடுக்க வேண்டியதில்லை. மேப்பிள்ஸ் செயலி, அரசாங்கத்தின் டிஜிபின் (DIGIPIN) அமைப்புடன் இணைந்து செயல்படும் ஒரு டிஜிட்டல் முகவரி அமைப்பை உருவாக்கியுள்ளது. இனி உங்கள் இருப்பிடம் வெறும் 6 எழுத்துகள்/எண்களைக் கொண்ட பின்தான்! இதை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். ஹைப்பர்-லோக்கல் நேவிகேஷன் இருப்பதால், தெருவில் உள்ள சரியான வீட்டையோ, கட்டிடத்தையோ தேடி, படிப்படியான துல்லியமான வழிகாட்டலைப் பெற முடியும்.
2. 'சுங்கச் சாவடி கால்குலேட்டர்'
வழியில் எத்தனை டோல் கேட்கும்? எவ்வளவு செலவாகும்? என்ற கவலை இனி இல்லை. மேப்பிள்ஸ் செயலியில் உள்ள இன்-பில்ட் டோல் கால்குலேட்டர், நீங்க செல்லும் பாதையில் உள்ள மொத்த சுங்கக் கட்டணத்தை மட்டுமல்லாமல், அதற்கேற்ப மிகக் குறைந்த செலவிலான மாற்று வழிகளையும் கணக்கிட்டுக் காட்டும். சுங்கக் கட்டணத்துடன், பயணத்தின் மொத்த எரிபொருள் செலவையும் இது கணக்கிட்டுக் காட்டுவதால், உங்க மொத்த பயணச் செலவை முன்கூட்டியே திட்டமிடலாம்.
3. குழப்பமே இல்லாத 3D காட்சிகள்
ஃபிளைஓவரில் எந்தத் திருப்பத்தில் திரும்ப வேண்டும் என்று குழம்பி, கடைசி நொடியில் லேன் மாற்றி விபத்தைத் தவிர்த்த அனுபவம் உண்டா? இனி அந்தச் சிக்கல் இல்லை. மேப்பிள்ஸ் தனித்துவமான 3D சந்திப்புப் பார்வையை வழங்குகிறது. இதில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற சிக்கலான சந்திப்புகள், தெளிவான பாதைகளுடன் 3D படங்களாகவே காட்சியளிக்கும். இதனால் எந்த வெளியேறும் வழியைத் (Exit) தவறவிட மாட்டீர்கள்; பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம். (இதற்காக 2021-ல் இஸ்ரோவுடன் மேப்பிள்ஸ் கூட்டணி அமைத்தது)
4. பெங்களூரில் டிராஃபிக் லைட் கவுண்ட்டவுன் லைவ்!
டிராஃபிக் சிக்னலில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என தெரியாமல் எரிச்சலடைவது இனி இல்லை. பெங்களூரு போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து மேப்பிள்ஸ், நகரின் 169 டிராஃபிக் சிக்னல்களில் நேரடி கவுண்ட்டவுன் டைமர்களைக் காட்டுகிறது. இது இந்தியாவில் இத்தகைய அம்சத்தைக் கொண்ட முதல் செயலியாகும். ஏ.ஐ. மூலம் இயங்கும் இந்த அம்சம், உண்மையான வாகன நெரிசலுக்கு ஏற்ப சிக்னல் நேரத்தை மாற்றியமைக்கும். இதனால், நெரிசல் குறைவான மாற்று வழிகளை மேப்பிள்ஸ் உடனுக்குடன் உங்களுக்குப் பரிந்துரைக்கும்.
5. இந்திய சாலைகளுக்கான பிரத்யேக எச்சரிக்கைகள்
மேப்மைஇந்தியா 1995-ல் நிறுவப்பட்டுப் பல பத்தாண்டுகளாக இந்திய நிலப்பரப்பை வரைபடமாக்கி வருகிறது. இந்த அனுபவம்தான் பெரிய நிறுவனங்கள் கோட்டைவிடும் நுணுக்கமான விஷயங்களை மேப்பிள்ஸ் பிடித்துள்ளது. பள்ளங்கள் (Potholes), வேகத் தடைகள் (Speed Breakers), கூர்மையான திருப்பங்கள் மற்றும் ஸ்பீட் கேமராக்கள் போன்ற இந்தியச் சாலைகளுக்கே உரிய அபாயங்களுக்கான பிரத்யேக எச்சரிக்கைகளை மேப்பிள்ஸ் வழங்குகிறது. மொத்தத்தில், கூகுள் மேப்ஸின் உலகளாவிய அம்சங்கள் ஒருபுறம் இருக்க, உள்ளூர் துல்லியத்துடன், பணத்தைச் சேமிக்கும் வழிகளைச் சொல்லும் இந்தத் துல்லியமான இந்தியச் செயலி, உங்கள் பயண அனுபவத்தையே மாற்றப் போகிறது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.