இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைகற்றை ஏலம் நேற்று (ஜூலை 26) தொடங்கியது. முதல் நாளில் நான்கு சுற்றுகளாக நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.45 லட்சம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
மொத்தம் ரூ.4.3 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ள 72 ஜிகா ஹெர்ட்ஸ் அலைகற்றைக்கான ஏலம் நடைபெறுகிறது. நேற்று 4 சுற்றுகள் ஏலம் நிறைவடைந்த நிலையில் இன்று (ஜூலை 27) 5ஆவது சுற்று ஏலம் நடைபெறுகிறது.
தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று 3,300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை பெற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. அதேவேளையில் 600 மெகா ஹெர்ட்ஸ் குறைந்த ஏலத்தொகையைப் பெற்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ ரூ.14,000 கோடி, ஏர்டெல் ரூ. 5,500 கோடி, வோடஃபோன் ரூ.2,200 கோடி, அதானி குழுமம் ரூ.100 கோடி செலுத்தி உள்ளன. 4ஜிஅலைக்கற்றையை விட 5ஜி அலைக்கற்றையின் வேகம் 10 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்திற்கு பின்பு அலைக்கற்றைகளை நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நடைமுறை ஆகஸ்ட்14க்குள் நிறைவடையும் என்றும், செப்டம்பர் மாதத்தில் 5ஜி சேவை வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil