இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி நடந்தது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.
ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. ஜியோவின் நேரடி போட்டியாளரான ஏர்டெல் ரூ.43,084 கோடி ஏலம் எடுத்தது. அனைத்து நிறுவனங்களுக்கும் அலைகற்றை ஒதுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையை பிரதமர் மோடி அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை இந்திய மொபைல் மாநாடு நடைபெறுகிறது. அக்டோபர் 1ஆம் தேதி மாநாட்டை தொடங்கி வைக்கும் பிரதமர் 5ஜி சேவைவை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சேவையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சி இந்தியா மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என தேசிய பிராட்பேண்ட் மிஷன் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், வோடபோன் ஐடியா தலைவர் ரவீந்தர் தக்கர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் தனது 5ஜி சேவைகளை டெல்லி, மும்பை உள்பட 7 நகரங்களில் முதல்கட்டமாக வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவையை முதலில் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் தொடங்குகிறது. அதைத்தொடந்து மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல நகரங்களில் விரிவுபடுத்தப்படும். அடுத்த ஆண்டுகளில் அனைவரது பயன்பாட்டிற்கும் 5ஜி கிடைக்கும்படி விரைந்து செயல்படுத்தப்படும் என்றார்.
Mobipro Innovation Pvt Ltd நிறுவனத்தின் கீழ் உள்ள இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப மையமாகும். தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்தியா செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தாண்டு சுதந்திர தினவிழா உரையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் 5ஜி குறித்து பேசினார். மேலும் தற்போதுள்ள 4ஜி சேவையை விட 5ஜி, 10 மடங்கு வேகமாக செயல்படும் எனக் குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil