இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ஆகியவை இம்மாத இறுதியில் 5ஜி சேவை வழங்க உள்ளன. இந்தியா மொபைல் காங்கிரஸ் (India Mobile Congress) தொடக்க விழாவில் இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. 5ஜி இணையசேவை 4ஜியை விட 10 மடங்கு வேகமாக இருக்கும் என்று பிரதமர்மோடி அண்மையில் தெரிவித்தார். 5ஜி சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும். முதல் கட்டமாக குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்படுகிறது. அவை,
1. அகமதாபாத்
2. பெங்களூரு
3. சண்டிகர்
4. சென்னை
5. டெல்லி
6. காந்திநகர்
7. குருகிராம்
8. ஹைதராபாத்
9. ஜாம்நகர்
10. கொல்கத்தா
11. லக்னோ
12. மும்பை
13. புனே
இந்த நகரங்களில் வசிக்கும் அனைவருக்கும் 5ஜி சேவை கிடைக்குமா என்றால் இல்லை. இந்த நகரங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சேவை வழங்கப்பட உள்ளது. ஆனால் அது எந்தெந்த இடங்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. 5ஜி சேவை அனைவரது பயன்பாட்டிற்கும் வர கால தாமதம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.