/indian-express-tamil/media/media_files/2025/04/09/yMLkJeQxiVdHqmDb9voU.jpg)
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாயன்று புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தினார். அணுகல் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் ஃபேஸ் ஐடி மற்றும் க்யூஆர் குறியீடு போன்ற புதிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 8-ஆம் தேதி புது டெல்லியில் நடந்த ஆதார் சம்வாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசின் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆதார், அடித்தளமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் புதிய ஆதார் செயலி குறித்து அவர் பதிவிட்டுள்ளார். அதில், இனி ஆதார் அட்டையின் நகல்களை இந்தியர்கள் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
'தேவையான தரவை மட்டும் பகிரவும்'
இந்த செயலியின் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதில், "தேவையான தரவை மட்டும் பகிர" என்ற ஒரு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது, சம்பந்தப்பட்ட நபர் எந்த அளவிற்கான தகவல்களை மட்டும் பகிர வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது.
ஆதார் சரிபார்ப்பு என்பது யு.பி.ஐ பணப்பரிவர்த்தனை போன்று எளிமையானது
"ஆதார் சரிபார்ப்பு என்பது யு.பி.ஐ பணப்பரிவர்த்தனை போன்று எளிமையானது. பயனர்கள் தங்கள் தனியுரிமையை உறுதி செய்யும் போது டிஜிட்டல் முறையில் சரிபார்த்து பகிர்ந்து கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
'இனி நகல்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை'
இனி ஆதார் அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை, சரி பார்ப்பு பணிகளுக்காக இந்தியர்கள் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று செயலியை அறிமுகப்படுத்திய போது அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். க்யூஆர் குறியீட்டை பயன்படுத்தி தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'100 சதவீதம் டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பானது'
ஆதார் இப்போது '100 சதவீதம் டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பானது' என்று அவர் கூறியுள்ளார். ஹோட்டல்கள், கடைகள் அல்லது பயணத்தின் போது ஆதார் நகல்களை ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை. ஆதார் செயலி பாதுகாப்பானது மற்றும் பயனரின் வெளிப்படையான ஒப்புதலுடன் மட்டுமே தரவைப் பகிர வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் செயலியானது "அதிக தனியுரிமை, மோசடி அல்லது எடிட்டிங் ஆகியவற்றிற்கு எதிரான பாதுகாப்பை" உறுதி செய்வதோடு, "ஆதார் தரவின் தவறான பயன்பாடு அல்லது கசிவுகளைத் தடுக்கிறது" என்றும் அவர் கூறினார்.
இந்த ஆதார் சம்வாத் நிகழ்வில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பங்கேற்பாளர்களும் உட்பட பீட்டா பயனர்களுக்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், (யுஐடிஏஐ) பீட்டா பயனர்கள் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டாளர்களிடமிருந்து கருத்துக்களை பெற்ற பிறகு, பொது மக்களிடம் இதை வெளியிட திட்டமிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.