சூரியனை ஆய்வு செய்யும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஆதித்யா எல்.1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. பூமி- சூரியன் இடையே எல்.1 புள்ளியில் இருந்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
சந்திரயான்- 3 திட்டம் போலவே ஆதித்யா எல்.1 விண்கலமும் பூமி சுற்றுப் பாதை உயர்த்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தப்படும்.
இந்நிலையில், ஆதித்யா எல்.1 சூரியனை நோக்கிச் செல்லும் போது தன்னை “செல்ஃபி” எடுத்து அனுப்பியுள்ளது. மேலும் அது பூமி, நிலவை எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ இன்று (செப்.7) பகிர்ந்துள்ளது.
செவ்வாய்க் கிழமை காலை விண்கலத்தை பூமி சுற்றுப் பாதை உயர்த்தப்பட்ட பிறகு அது புதிய உயர்ந்த சுற்றுப் பாதையை அடைந்ததாக இஸ்ரோ அறிவித்தது. விண்கலம் தற்போது பூமியின் மேற்பரப்பில் இருந்து 282 கிலோ மீட்டர் நெருக்கமாகவும், 40,225 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது .
லாக்ரேஞ்ச் புள்ளிக்கு செல்லும் இஸ்ரோவின் முதல் திட்டம் இதுவாகும். சூரியன் மற்றும் பூமி போன்ற இரண்டு பெரிய கோள்கள் இருக்கும் போது, ஒரு சிறிய நிறை இரண்டையும் ஒரு நிலையான வடிவத்தில் சுற்றி வரக்கூடிய ஐந்து சிறப்பு புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகள் இத்தாலிய-பிரெஞ்சு கணிதவியலாளரான ஜோசபி-லூயிஸ் லாக்ரேங்கின் நினைவாக லாக்ரேஞ்ச் புள்ளிகள் என்று பெயரிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“