இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல் 1 விண்கலம் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ
தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியை (எல்.1) ஜனவரி 6-ஆம் தேதி அடையும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.
ஹாலோ சுற்றுப் பாதை எல் 1-ல் இருந்து சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலம் ஆய்வகம் செப்டம்பர் 2-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC) இருந்து ஏவப்பட்டது.
“ஜனவரி 6-ம் தேதி ஆதித்யா விண்கலம் எல்.1 புள்ளியில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எந்த நேரத்தில் சரியாக நுழையும் என்று பின்னர் அறிவிக்கப்படும்” என்று சோம்நாத் கூறினார்.
மேலும் கூறிய அவர், விண்கலம் எல்.1 புள்ளியை அடையும் போது, அது மேலும் செல்லாமல் இருக்க என்ஜின் இயக்கப்படும். விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்குச் செல்லும். அந்த இடத்தை அடைந்ததும் விண்கலம் சுற்றிச் சுழன்று எல்.1-ல் நிலைநிறுத்தப்படும் என்றார்.
வெற்றிகரமாக எல்.1புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டால் விண்கலம் எல்.1புள்ளியில் இருந்து சூரியனின் பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்து பூமிக்கு தகவல் அனுப்பும். 5 ஆண்டுகளுக்கு விண்கலம் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகள் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் உதவியாக இருக்கும்.
சூரியனின் இயக்கவியல் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த தரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
மேலும் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி ‘அமிர்த காலின்’ போது ‘பாரதிய விண்வெளி நிலையம்’ என்ற பெயரில் இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது என்று சோமநாத் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“