இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், கடந்த திங்கட்கிழமை செல்கான் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இதன்மூலம், 4ஜி ஸ்மார்ட்போனை வெறும் 1349 ரூபாய்க்கு அறிமுகம் செய்கிறது.
'மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்' என்கிற பெயரில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம், கார்போன் மொபைல்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் மூலம், ரூ.1399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
கடந்த வாரம் வோடஃபோன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.999-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்த நிலையில், ஏர்டெல் தற்போது செல்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மொபைலில் 4-இன்ச் டச் ஸ்க்ரீன், டூயல் சிம் சிலாட், எஃப்எம் ரேடியோ ஆகியவையும் உள்ளது.
மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட அனைத்து ஆப்ஸ்-களையும் டவுன்லோட் செய்ய முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புதிய செல்கான் சலுகையின் கீழ் ரூ.3,500 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் முதலில் ரூ.2,849 செலுத்தி பெற முடியும். பாரதி ஏர்டெல் சார்பில் ரூ.1,500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனுடன் ரூ.169 திட்டத்தில் 500 எம்பி டேட்டா, உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
ஏர்டெல் வழங்கும் கேஷ்பேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் வாங்கியதும் முதல் 18 மாதங்களில் ரூ.3000 மதிப்புள்ள ரீசார்ஜ்களை மேற்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக ரூ.500 பணத்தை திரும்ப பெற முடியும். அடுத்த 18 மாதங்களில் வாடிக்கையாளர்கள் மீண்டும் ரூ.3000 அளவு ரீசார்ஜ் செய்து ரூ.1,000 திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,349க்கு கிடைக்கிறது.