அஜித்தின் தக்ஷா அணி: நடிகர் அஜித் குமார், பள்ளிப் பருவத்திலிருந்தே ஏரோ மாடலிங் (aero-modelling) தயாரிப்புகளில் அதிக ஆர்வம் காட்டியவர். இந்த ஆர்வத்தினால், பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை வடிவமைத்து உருவாக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் அஜித் இணைந்தார். ஆளில்லா வான்வழி வாகனம் சேலஞ்சில் ‘தக்ஷா’அணி ஈடுபட்டது. இவர்களுக்கு உதவவும், தயாரிக்கும் முறைகள் பற்றி கற்றுத்தரவும் தன்னார்வத்துடன் நடிகர் அஜித் பங்கேற்றார்.
அவரது மேற்பார்வையில் விமானம் இயக்கும் நுட்பங்களை பயின்ற தக்ஷா மாணவ அணியினர், 6 மணிநேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கினர்.
இது உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது. இந்த பிரிவில் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று அஜித்தின் தக்ஷா அணி முதல் இடத்தையும் தட்டிச் சென்றது.
இதே அணி, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் நடைபெற்ற 'மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச் - 2018' போட்டியில் கலந்துகொண்டது. மருத்துவ சேவையில் ஆளில்லா விமானங்களின் பணி என்ற கருப்பொருளில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இதில் நீண்ட நேரம் பறக்குதல், தேவைப்படும்போது உடனடியாகத் தரை இறங்குதல், விமானக் குழுவின் நேர்காணல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
இதில் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் ஆளில்லா விமானத்துக்கும் இந்தியாவின் தக்ஷா ஆளில்லா விமானத்துக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதில் நூலிழையில் முதலிடத்தைத் தவறவிட்ட தக்ஷா விமானம், சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.