அமேசான் நிறுவனம் இந்தியாவில் மேலும் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்தார். நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது சந்திப்புக்கு பின் ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்தார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக கடந்த 3 தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவு மேம்பாடு குறித்து பேசப்பட்டது. பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதோடு அமெரிக்கா- இந்தியா தொழில் அதிபர்கள், பெரு நிறுவனங்களின் சி.இ.ஓ-களை சந்தித்து பேசினார். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் வணிக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸியை மோடி சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜாஸ்ஸி, இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தியாவில் அதிக முதலீடு செய்த நிறுவனங்களில் அமேசான் முக்கிய பங்காற்றுகிறது.
தற்போது வரை நாங்கள் இந்தியாவில் 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளோம். தற்போது மேலும் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் எங்கள் முதலீடு 26 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றார். 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கு எட்டப்படும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“