Iphone 12 series launch event Tamil news: கடந்த செவ்வாயன்று தனது சமீபத்திய 5 ஜி திறனுடன் கூடிய ஐபோன் 12 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். 5.4 இன்ச் ஐபோன் 12 மினி உட்பட நான்கு ஐபோன்கள் இந்த சீரிஸில் உள்ளன. அதுமட்டுமின்றி, ஹோம் பாட் மினி (HomePod Mini) என்ற புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் புதிய ஐபோன்களுக்காக மேக்ஸேஃப் (MagSafe) சார்ஜிங் பிராண்டை மீண்டும் கொண்டு வந்து அசத்தியது ஆப்பிள்.
ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 12 மினி
அப்பிளின் இந்த ஒரு மணி நேர நிகழ்வின் போது, புதிய ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினியை அறிவித்தது. இதில் 6.1 இன்ச் மற்றும் 5.4 இன்ச் டிஸ்பிளேக்கள் காட்டப்பட்டன. ஐபோன் 12 வரிசையின் ஓர் பகுதியாக அறிவிக்கப்பட்ட நான்கு மாடல்களில் இவை இரண்டும் உண்டு.
இந்த இரண்டு புதிய ஐபோன்களும் 5-ஜியை ஆதரிக்கின்றன மற்றும் தட்டையான (flat) விளிம்புகளுடன் புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இந்த ஐபோன் 12, 11 சதவிகிதம் மெல்லியது எனவும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து ஐபோன் மாடல்களிலும் OLED டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் ஆப்பிள் தெரிவித்தது.
முன் திரைக் கண்ணாடியில் ‘செராமிக் ஷீல்ட்’ எனப்படும் ஃபினிஷ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சாதனத்தின் ஆயுளை மேம்படுத்த உதவுகிறது. இன்றுவரை வெளிவந்த பிற ஸ்மார்ட்போன் கிளாஸ் விட இது கடுமையானது என்று ஆப்பிள் கூறுகிறது.
A14 பயோனிக் சிப்செட்டால் ஐபோன் 12 வரிசை இயக்கப்படுகிறது. 5nm செயல்முறையைப் பயன்படுத்தும் உலகின் முதல் ப்ராசசர் இதுதான். புதிய சிக்ஸ்-கோர் சிபியு மற்ற ஸ்மார்ட்போன்களை விட 50 சதவிகிதம் வேகமாக இருக்கும் என்று ஆப்பிள் குறிப்பிடுகிறது.
ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி இரண்டும் புதிய 12MP அகலமான கேமராவை கொண்டிருக்கின்றன. குறைந்த வெளிச்சத்தில் 27 சதவிகிதம் வரை வெளிச்சம் தரக்கூடிய ஏழு உறுப்பு லென்ஸை முதன்முறையாக ஆப்பிள் பயன்படுத்தியிருக்கிறது.
கருப்பு, வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் ஐபோன் 12 வருகின்றன. இதன் விலை ரூ.79,990-லிருந்து தொடங்குகிறது. இந்த போன் அக்டோபர் 30 முதல் இந்தியாவில் கிடைக்கும். சேமிப்பிடத்தைப் பொருத்தவரை, 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி நிலைகளை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். மேலும், ஐபோன் 12 மினி ரூ.69,990-லிருந்து தொடங்குகிறது.
புதிய வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பமான MagSafe-யும் ஐபோன் 12 கொண்டிருக்கிறது. MagSafe-உடன், ஐபோன் 12 காந்தம் போன்று சார்ஜரில் ஒட்டிக்கொள்கிறது. இதுமட்டுமின்றி புதிய ஐபோனுடன் இணைத்து உபயோகிக்க நிறைய பாகங்களையும் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்
ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் எனப்படும் புதிய பிரீமியம் ப்ரோ மாடல்களையும் ஆப்பிள் வெளியிட்டது. ஐபோன் 12 ப்ரோ, 6.1 இன்ச் டிஸ்ப்ளேவையும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், 6.7 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கின்றன. இதுதான் இன்றுவரை வெளியிடப்பட்ட மிகப்பெரிய ஐபோன் ஸ்க்ரீன் என்று ஆப்பிள் நிறுவனம் குறிப்பிடுகிறது. ஐபோன் 12 ப்ரோவின் ஃபிரேம், நீடித்த ஸ்டீல் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோ மாடல்கள் பசிஃபிக் நீலம், கிராஃபைட், கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும்.
5 ஜியுடன் பரந்த, அல்ட்ரா வைட் லென்ஸ்கள் மற்றும் பெரிய கேமரா சென்சார்கள் கூடுதலாக ஓர் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவையை ப்ரோ மாடல்களில் காணலாம். 3D ஸ்கேன்களை அதிக துல்லியத்துடன் உருவாக்கக்கூடிய LIDAR ஸ்கேனர் இதில் உள்ளது. இது, அதிவேகமான ஆட்டோஃபோகஸையும் செயல்படுத்துகிறது.
ஐபோன் 12 ப்ரோ ரேஞ்சில் புதிய ஆப்பிள் வடிவமைப்பைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க முடியும். இதில் HDR-ஐ பயன்படுத்தி வீடியோக்களைப் பதிவுசெய்யலாம் மற்றும் டால்பி விஷன் வீடியோக்களைப் பதிவு செய்வதற்கும் ஆதரிக்கிறது.
ஐபோன் 12 ப்ரோ ரூ.119,990 விலையில் தொடங்குகிறது. அக்டோபர் 30 -ம் தேதி இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரவிருக்கின்றன. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ரூ.129,990 விலையில் தொடங்குகிறது. இந்தியாவில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் வெளியீட்டு தேதியை ஆப்பிள் இன்னும் அறிவிக்கவில்லை. சேமிப்பிற்கு, 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இடையே தேர்வு செய்துகொள்ளலாம்.
ஹோம்பாட் மினி
'சிரி (Siri)' மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கரான ஹோம் பாட் மினியை ஆப்பிள் வெளியிட்டது. ஹோம் பாட்டின் மினியேச்சர் பதிப்பு புதிய வட்டக் கிண்ண வடிவத்தைக் கொண்டுள்ளது. இது மெஷ் (Mesh) துணியால் மூடப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்பீக்கர், 360 டிகிரி அலை வரிசையை வழங்குகிறது. ஹோம் பாட் மினி ஆப்பிளின் எஸ் 5 சிப்பால் இயக்கப்படுகிறது. ஏர்ப்ளே 2 மல்டி-ரூம் திறன்களையும் இந்த ஹோம் பாட் மினி ஆதரிக்கிறது. இதன்மூலம் பல ஸ்பீக்கர்களை இணைக்கலாம். மேலும் இந்த சாதனம், இசையைப் பகுப்பாய்வு செய்து சத்தம், டைனமிக் வீச்சு மற்றும் மேலும் பலவற்றை மேம்படுத்துகிறது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. கூடுதலாக, இது கார்ப்ளேயுடனும் (CarPlay) வேலை செய்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.