Apple Online Store in India : ஆன்லைன் விற்பனையில் தடம் பதித்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது செப்டம்பர் 23 அன்று தன் ஆன்லைன் ஸ்டோரை இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது ஆப்பிள். இதனை, பொருட்களின் ‘முழு தொகுப்பு’ மற்றும் நேரடி வாடிக்கையாளர் ஆதரவுடன் அறிமுகப்படுத்தவுள்ளது. தனிப்பட்ட கஸ்டமைசேஷன் விருப்பம், பேக்கேஜிங் மற்றும் ஆலோசனை அமர்வுகள் போன்ற வித்தியாச அனுபவங்களையும் இது கொண்டு வரும். ஆப்பிள் தன்னுடைய முதல் ஆஃப்லைன் ஸ்டோரை மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைக்கும் எனக் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
“ஆப்பிள் தயாரிப்புகளின் முழு தொகுப்போடு ஆப்பிள் ஸ்டோரை ஆன்லைனில் திறக்க உள்ளோம். இந்த வாரத் தொடக்கத்தில் நாங்கள் அறிவித்த புதிய தயாரிப்புகளும் எங்களின் இந்த ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும். நாங்கள் தனிப்பட்ட வகையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப் போகும் ஆதரவை நினைக்கையில் மிகவும் உற்சாகமாய் இருக்கிறது” என்று ஆப்பிள் நிறுவனத்தின் மக்கள் மற்றும் ரீடெயில் பிரிவின் துணைத் தலைவரான Deirdre O’Brien, indianexpress.com-ற்கு பிரத்தியேகமாகக் கூறினார்.
ப்ளூ டார்ட்டுடன் (Blue Dart) இணைந்து, வாடிக்கையாளர்களின் இருப்பிடத் தூரத்தைப் பொறுத்து, வாங்கிய நாளிலிருந்து 24 முதல் 72 மணி நேரத்திற்குள் இலவச டெலிவரி சேவையை அளிக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது ஆப்பிள். முதலில், நாடு முழுவதும் சுமார் 13,000 அஞ்சல் குறியீடுகள் உள்ளடக்கிய இடங்களுக்கு டெலிவரி செய்யத் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. என்றாலும், கோவிட்-19 பேண்டமிக் நிலை காரணமாக நாடெங்கிலும் லாக் டவுன் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், அனைத்துப் பகுதிகளுக்கும் டெலிவரி செய்யமுடியுமா என்பது கேள்விக்குறிதான்.
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள், “எங்களின் பிரத்தியேக தயாரிப்புகளை உண்மையிலேயே தடையற்ற வழியில் வாங்குவதற்கான செயலை, குறிப்பாக கோவிட்19-ன் போது, எந்தவித பாதிப்பும் இல்லாத வழியில் வழங்கப்படுவதை நன்கு உணரப் போகிறார்கள்” என்று O’Brien கூறினார். மேலும், “எங்களின் ரீசெல்லர் பார்ட்னர்ஸ் (reseller partners) சில காலமாக இந்தியாவில் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே, இந்தியாவில் வணிகம் செய்வதில் எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றும் அவர் நினைவுபடுத்தினார்.
ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோர் அனுபவம் அதன் புகழ்பெற்ற ஆஃப்லைன் அனுபவத்தைப்போலவே தனித்துவமாக இருக்கும். இந்தியாவில், ஆங்கிலத்தில் ஆன்லைன் ஆதரவையும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தொலைப்பேசி ஆதரவையும் ஆப்பிள் வழங்கும். ஓர் பொருள் வாங்கப்பட்டவுடன், வாடிக்கையாளர்கள் உள்ளூர் ஆப்பிள் நிபுணர்களுடன் 30 நிமிட இலவச ஆலோசனை அமர்வை முன்பதிவு செய்து அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்துகொள்ளுவதற்கான வசதிகளும் இருக்கின்றன.
கஸ்டமைசேஷன் வசதி இந்திய ஆப்பிள் சந்தையில் நாங்கள் கொண்டு வரும் மற்றொரு அம்சம். வாடிக்கையாளர்கள் விரும்பும் துல்லியமான கான்ஃபிகரேஷன் கொண்ட மேக் தயாரிப்பை ஆன்லைன் ஸ்டோர் மூலம் எளிதில் வாங்கலாம். திருவிழா பருவத்திற்குச் சற்று முன்னதாக, இந்திய வாடிக்கையாளர்கள் iPad மற்றும் ஆப்பிள் பென்சில் ஆகியவற்றில் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட குறுஞ்செய்திகளைப் பெற முடியும். ஏர்பாட்களில் (AirPods), ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்ட எமோஜிகளைப் பெற முடியும்.
ஆப்பிள் ஸ்டோரில் விலை நிர்ணயம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆன்லைன் ஸ்டோருக்குள் டிரேட்-இன் (trade-in) திட்டத்தின்மூலம் அனைத்து நிதி மற்றும் EMI விருப்பங்களும் கிடைக்கும். எனினும், பேண்டமிக் காலகட்டம் என்பதால் கேஷ் ஆன் டெலிவரி (cash on delivery) வசதி சிறிது காலம் இருக்காது.
ஆப்பிளின் சிறப்பு மாணவர் சலுகை இந்தியாவில் மேக் மற்றும் iPad ஆகிய தயாரிப்புகளுடன் தனிப்பட்ட பாகங்கள் மற்றும் ஆப்பிள் கேர்+ ஆகியவற்றுக்கான தள்ளுபடியுடன் கிடைக்கும். இது இரண்டு ஆண்டு தொழில்நுட்ப சப்போர்ட் மற்றும் தற்செயலான சேத பாதுகாப்புடன் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டம் (warranty programme). அக்டோபர் முதல், ஆப்பிள் அதன் தயாரிப்புகளை ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதை நிபுணர் பகிர்ந்துகொள்ளும் அமர்வுகள் இனி அனைத்து இந்தியப் பயனர்களுக்கு ஆன்லைனிலும் கிடைக்கும்.
இதற்கு முன்பு வேறெங்கும் செய்யாத ஓர் விஷயமாக ஆப்பிள் அதன் ஆன்லைன் ஸ்டோர் அறிமுகத்திற்கும் சில நாட்களுக்கு முன்னதாக அதனைப் பற்றி விளம்பரப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“