இஸ்ரேலிய என்.எஸ்.ஓ (NSO) குழுமத்தின் சர்ச்சைக்குரிய பெகாசஸ் (Pegasus) மால்வேர் உட்பட, "கூலிப்படை ஸ்பைவேர்" மூலம் அவர்களது ஐபோன் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்று எச்சரித்து, இந்தியா உட்பட 91 நாடுகளில் உள்ள தனது பயனர்கள் சிலருக்கு, ஆப்பிள் ஒரு புதிய சுற்று எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்பியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Apple warns some Indian users their iPhone may be bugged by Pegasus-type spyware
எந்தவொரு பயனருக்கும் சமீபத்திய தாக்குதல் அலைகளுக்கான காரணம் குறித்து ஆப்பிள் நிறுவனம் எதுவும் கூறவில்லை. கடந்த அக்டோபரில், காங்கிரஸின் சசி தரூர் முதல் ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா வரை அனைத்துக் கட்சிகளிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இதேபோன்ற அறிவிப்பை அனுப்பியிருந்தது, அதாவது அவர்களின் ஐபோன்களில் "அரசால் கண்காணிப்படும் ஸ்பைவேர் தாக்குதல்" பற்றிய எச்சரிக்கையை அனுப்பியிருந்தது.
அரசாங்கத்தின் அழுத்தத்திற்குப் பிறகு, "எச்சரிக்கை அறிவிப்புகளை எந்தவொரு குறிப்பிட்ட அரசு ஆதரவுடன் தாக்குதல் நடந்திருப்பதாக தொடர்புபடுத்த விரும்பவில்லை’ என்று ஆப்பிள் நிறுவனம், பின்னர் தெளிவுபடுத்தியது.
இந்தியாவில் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 11) அதிகாலை 12.30 மணியளவில் எச்சரிக்கை அறிவிப்பு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எத்தனை பேர் எச்சரிக்கை அறிவிப்பைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மின்னஞ்சலில் NSO-குழுவின் பெகாசஸ் ஸ்பைவேரும் குறிப்பிடப்பட்டுள்ளது, இது போன்ற கருவிகள் உலகளவில் தொடர்ந்து மக்களை குறிவைக்க பயன்படுத்தப்படுகின்றன.
"எச்சரிக்கை: உங்கள் ஐபோன் மீது இலக்கு வைக்கப்பட்ட கூலிப்படை ஸ்பைவேர் தாக்குதலை ஆப்பிள் கண்டறிந்துள்ளது" என்று எச்சரிக்கை அறிவிப்பின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதன் நகலை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்த்துள்ளது.
“உங்கள் ஆப்பிள் ஐடி -xxx- உடன் தொடர்புடைய ஐபோனை தொலைவிலிருந்து உளவு செய்ய முயற்சிக்கும் கூலிப்படையின் ஸ்பைவேர் தாக்குதலால் நீங்கள் குறிவைக்கப்படுகிறீர்கள் என்பதை ஆப்பிள் கண்டறிந்துள்ளது. நீங்கள் யார் அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் காரணமாக இந்த தாக்குதல் உங்களை குறிவைத்து இருக்கலாம். இத்தகைய தாக்குதல்களைக் கண்டறியும் போது முழுமையான உறுதியை அடைவது ஒருபோதும் சாத்தியமில்லை என்றாலும், இந்த எச்சரிக்கையில் ஆப்பிள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது - தயவு செய்து அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அறிவிப்பு மின்னஞ்சல் கூறியது.
"NSO குழுமத்தில் இருந்து பெகாசஸைப் பயன்படுத்துவது போன்ற கூலிப்படை ஸ்பைவேர் தாக்குதல்கள், வழக்கமான சைபர் கிரிமினல் செயல்பாடு அல்லது நுகர்வோர் மால்வேரைக் காட்டிலும் மிகவும் அரிதானவை மற்றும் மிகவும் அதிநவீனமானவை. இந்த தாக்குதல்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகும் மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு எதிராக தனித்தனியாக பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் இலக்கு தொடர்கிறது மற்றும் உலகளாவியது," என்று ஆப்பிள் தனது எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பயனர்கள் பெறும் அனைத்து இணைப்புகளிலும் எச்சரிக்கையாக இருக்குமாறும், எதிர்பாராத அல்லது தெரியாத அனுப்புநர்களிடமிருந்து எந்த இணைப்புகளையும் தொடர்புகளையும் திறக்க வேண்டாம் என்றும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், அச்சுறுத்தல் அறிவிப்பை அனுப்புவதற்கான காரணம் என்ன என்பது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க முடியவில்லை என்று நிறுவனம் கூறியது, ஏனெனில் இது கூலிப்படை ஸ்பைவேர் தாக்குபவர்களுக்கு "எதிர்காலத்தில் கண்டறிதலைத் தவிர்க்க அவர்களின் நடத்தையை மாற்றியமைக்க" உதவும் என்று ஆப்பிள் விளக்கம் அளித்துள்ளது.
கூலிப்படையின் ஸ்பைவேர் தாக்குதலுக்கு இலக்காக இருந்த பயனர்களுக்கான உதவிக்குறிப்புகளைச் சேர்க்க ஆப்பிள் தனது ஆதரவுப் பக்கத்தையும் புதுப்பித்துள்ளது. "ஆப்பிள் எச்சரிக்கை அறிவிப்புகள் கூலிப்படையின் ஸ்பைவேர் தாக்குதல்களால் தனித்தனியாக குறிவைக்கப்பட்டிருக்கக்கூடிய பயனர்களுக்குத் தெரிவிக்கவும் உதவவும் வடிவமைக்கப்பட்டுள்ளன, அவர்கள் யார் அல்லது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதன் காரணமாக இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம்" என்று ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் கூறியது.
ஆப்பிள் இந்த எச்சரிக்கை அறிவிப்புகளை 2021 இல் அனுப்பத் தொடங்கியது, அதன் பின்னர் 150 நாடுகளில் உள்ள தனிநபர்கள் அவற்றைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அது அறிவிப்பை அனுப்பியபோது, ஐபோன்கள் வைத்திருந்த குறைந்தது 20 இந்தியர்கள் எச்சரிக்கை அறிவிப்பைப் பெற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் இதே போன்ற பிரச்சினைகள் குறித்த விசாரணைகள் அதிக பலனைத் தரவில்லை. 2021 ஆம் ஆண்டில், இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுமத்தால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு குற்றச்சாட்டுகளை ஆராய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
சில ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க மென்பொருளை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து பெகாசஸ் சர்ச்சை வெளியானது. இதையடுத்து, இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆகஸ்ட் 2022 இல், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஆய்வு செய்த தொலைபேசிகளில் ஸ்பைவேரைப் பயன்படுத்துவதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் வல்லுநர் குழுவுடன் மத்திய அரசு "ஒத்துழைக்கவில்லை" என்று குறிப்பிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“