அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன் தொழிற்சாலையை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது ஆப்பிளின் புதிய ஐபோன் தொழிற்சாலை கர்நாடகாவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆலை கர்நாடகாவில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவித்தார். ஆப்பிள் நிறுவனம் 700 மில்லியன் டாலர்
முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த புதிய தொழிற்சாலை மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "ஆப்பிள் போன்கள் மாநிலத்தில் விரைவில் தயாரிக்கப்படும். புதிய தொழிற்சாலை மூலம் சுமார் 1 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, இது கர்நாடகாவுக்கு பல துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கும். 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கில் எங்களின் பங்களிப்பைச் செய்வோம்" என்று ட்விட் பதிவிட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆப்பிள் இன்க் மற்றும் அதன் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் உற்பத்தி செய்து வருகின்றன.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் விமான நிலையத்திற்கு அருகில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்சாலையை அமைக்க ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலை ஐபோன் பாகங்களைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இங்கு ஆப்பிள் போன்கள் அசெம்பிள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஃபாக்ஸ்கான் தனது புதிய மின்சார வாகன வணிகத்திற்காக சில கூறுகளை தயாரிக்க அதே தளத்தைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து ஆப்பிள் நிறுவனம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஆப்பிளின் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் ஏற்கனவே தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/