அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப தீவிரம் காட்டி வருகிறது. ஆர்ட்டெமிஸ் III திட்டத்தில் 4 வீரர்கள் நிலவுக்கு பயணம் செய்ய உள்ளனர். அந்த வகையில் நாசா நிலவில் 3 அறிவியல் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது. அதில் ஒன்று நிலவில் செடி (தாவரங்கள்) (Plants) வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வருங்காலத்தில் நிலவில் மனிதர்கள் வாழும் வகையில் அவர்கள் உயிர் வாழத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் நோக்கில் நாசா இதை திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் நாசா Lunar Effects on Agricultural Flora (LEAF) என்ற பெயரில் விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சோதனையில், விண்வெளி வீரர்கள் நிலவில் தாவரங்களை வளர்ப்பார்கள், ஒளிச்சேர்க்கை மற்றும் வளரும் திறனைக் கவனித்து ஆய்வு செய்வார்கள். மேலும் குறைந்த புவியீர்ப்பு மற்றும் விண்வெளி கதிர்வீச்சின் அழுத்தத்திற்கு தாவரங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் ஆய்வு செய்வார்கள்.
எனினும் விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்படுவது இது முதல் முறை அல்ல. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 10 ஆண்டுகளாக காய்கறிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதே போல், 2019-ல் சீனாவின் சாங்'இ 4 பணியில் நிலவில் விதைகள் நடப்பட்டது. ஆனால் இந்த விதைகள் நீடிக்கவில்லை. இந்நிலையில் நாசாவின் தற்போதைய திட்டம் சரியாக நடந்தால், சந்திரனில் உள்ள தாவரங்களின் முழு வளர்ச்சி சுழற்சியைப் பற்றிய நமது முதல் பார்வையை LEAF பணி வழங்கும். நாசா 2026-ம் ஆண்டு ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“