/indian-express-tamil/media/media_files/2025/08/15/black-hole-36-billion-times-the-sun-2025-08-15-22-55-29.jpg)
விண்வெளியில் பிரமாண்ட பிளாக்ஹோல்... சூரியனை விட 36 பில்லியன் மடங்கு வெயிட்!
பூமியின் அருகே உள்ள பழைய விண்மீன் மண்டலத்தில் (galaxy), இதுவரை கண்டறியப்பட்டதில் மிகப்பெரிய (பிளாக்ஹோல்) கருந்துளைகளில் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது, நமது சூரியனைப் போல 36 பில்லியன் மடங்கு எடை கொண்டது. இதுமட்டுமல்லாமல், நமது மொத்த சூரிய குடும்பத்தைவிட 6 மடங்கு பெரியது என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, பிளாக்ஹோல் அதன் அருகில் உள்ள பொருட்களை ஈர்த்து, அதிகப்படியான ஒளியை வெளியிடுவதன் மூலம் கண்டறியப்படும். இந்த பிளாக்ஹோல் அருகில் தொலைதூர விண்மீன் மண்டலத்தில் இருந்து வந்த ஒளியை, அது ஈர்ப்பு விசையின் காரணமாக வளைத்து Einstein Horseshoe வடிவத்தை உருவாக்கியது. இந்த ஒளியின் வளைவை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இந்த பிளாக்ஹோல் பிரம்மாண்டமான எடையைக் கணக்கிட்டனர். அத்துடன், அதைச் சுற்றி வேகமாகச் சுழலும் நட்சத்திரங்களின் வேகத்தையும் அளவிட்டு, இந்த முடிவை உறுதிப்படுத்தினர்.
இந்தக் கண்டுபிடிப்பு, பிரபஞ்சத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் எப்படி கருந்துளைகள் உருவாகின என்பதைப் பற்றி புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த பிரம்மாண்ட பிளாக்ஹோல், அதன் அருகில் இருந்த மற்ற விண்மீன் மண்டலங்களை முழுவதும் உட்கொண்டு, அதன் பிறகு செயலற்ற நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் (University of Portsmouth) கூற்றுப்படி, இந்த ஈர்ப்பு லென்சிங் (gravitational lensing) முறையையும், அத்துடன் கருந்துளையை சுற்றி சுமார் 400 கி.மீ/வி வேகத்தில் சுற்றி வரும் நட்சத்திரங்களின் இயக்கத்தையும் அளவிடுவதன் மூலம், அதன் நிறை துல்லியமாக கணக்கிடப்பட்டது. இந்த நேரடி அணுகுமுறை, செயலற்ற நிலையில் உள்ள மற்ற பிரம்மாண்ட கருந்துளைகளைக் கண்டறிய உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த ஆய்வு, Monthly Notices of the Royal Astronomical Society என்ற அறிவியல் பத்திரிகையில் ஆக.7 அன்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் நமது பால்வெளி மண்டலம், அருகில் உள்ள அண்ட்ரோமீடா விண்மீன் மண்டலத்துடன் இணையும்போது என்ன நடக்கும் என்பதைப் பற்றிய தெளிவான பார்வையை வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.