/indian-express-tamil/media/media_files/2025/06/07/BOiindSRXnKzyFldlqhY.jpg)
சைபர் கிரைம் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி: ரூ.11.50 கோடி சுருட்டிய மர்மநபர்கள்!
மிகக் குறுகிய காலத்திலே பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் மக்கள் தங்கள் முழு வாழ்க்கையின் சம்பாத்தியத்தை இழக்கிறார்கள். அண்மையில், சைபர் கிரைம் பிரிவில் இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் மோசடி வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரபல கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர் ஆன்லைன் பந்தய வலைத்தளங்களில் 3 மாதங்களில் ரூ.11.50 கோடி -ஐ இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அனைத்தும் ஆன்லைன் விளம்பரத்துடன் தொடங்கியது. 46 வயதான அந்நபர் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பாதிக்கிறார். புகழ்பெற்ற நிறுவனத்தில் உயர் பதவியில் பணிபுரியும் அவர், அவரது மொபைலில் பந்தய செயலியின் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அந்த விளம்பரத்தை கிளிக் செய்தவுடன், போலியான வெப்சைட்டிற்கு சென்றுள்ளது.
ஆரம்பத்தில், அதிக லாபம் தந்து நம்பிக்கையை கொடுத்தது. படிப்படியாக, அவரது முதலீடு லட்சக்கணக்கில் அதிகரித்தது. அவர் மொத்தம் ரூ.17 கோடியை முதலீடு செய்ததாகவும், அதில் ரூ.11.50 கோடியை மோசடி நபர்கள் திருப்பித் தரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடி வெறும் 3 மாதங்களில் நடந்தது. மோசடி குறித்து உணர்ந்த அவர், 1930 என்ற ஹெல்ப்லைனில் புகார் அளித்தார். இந்த சம்பவத்தை உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள 'சைபர் தோஸ்த்' எக்ஸ்தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த வழக்கு இதுவரை சைபர் மோசடி ஹெல்ப்லைனில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய ஆன்லைன் மோசடியாக பார்க்கப்படுகிறது.
சைபர் மோசடி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிக்கு எதிராக கல்வி, தொழில்முறை வெற்றி அல்லது நிதி பாதுகாப்பு மட்டும் போதாது என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபிக்கிறது. உங்களுக்குத் தெரியாவிட்டால், சைபர் மோசடி எந்த நேரத்திலும் நிகழலாம். உங்களை எப்படி பாதுகாப்பது? தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம், தெரியாத செயலியில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். சந்தேகம் இருந்தால், உடனடியாக 1930-க்கு தெரிவிக்கவும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.