வருகின்ற ஜூலை 27ம் தேதி, இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் நிகழ இருக்கின்றது. இந்த சந்திர கிரகணத்தின் மிக முக்கிய நிகழ்வாக, ஆரம்பத்திலேயே ப்ளட் மூன் எனப்படும் செந்நிற நிலவு தோன்ற இருக்கிறது.
ப்ளூ மூன், ப்ளாக் மூன், ப்ளட் மூன், மற்றும் சூப்பர் மூன் என்று அடிக்கடி நாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இந்த நிலாக்களுக்கும், இந்த பெயர்களுக்கும் என்ன காரணம் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களின் பதில் தெரியாது என்றால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான்.
ப்ளூ மூன் (Blue Moon):
இந்த பெயரில் இருக்கும் நிறத்திற்கும் நிலவின் நிறத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. ஆனால், மாதத்தில் தோன்றும் இரண்டாவது பௌர்ணமி நிலவின் பெயர் தான் ப்ளூ மூன் எனப்படும்.
1940களில் தான் ப்ளூ மூன் என்ற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்தது. இந்த வருடத்தின் தொடக்கமான ஜனவரி 31ம் தேதி ப்ளூ மூனுடன் கூடிய சந்திர கிரகணம் தோன்றியது குறிப்பிடத்தக்கது. 150 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே இது போன்ற அரிய நிகழ்வுகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தில் மார்ச் மாதம் மீண்டும் ஒரு ப்ளூ மூன் தோன்றியது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தில் இரண்டு ப்ளூ மூன்கள் தோன்றுவதும் மிகவும் அரிது. அடுத்து இது போன்ற இரண்டு ப்ளூ மூன்கள் 2037ம் ஆண்டில் மட்டுமே தோன்றும்.
ப்ளாக் மூன் (Black Moon):
ஒரே மாதத்தில் நிகழும் இரண்டாவது அம்மாவாசை நிகழ்வினைக் குறிப்பிடுவது இந்த ப்ளாக் மூன் ஆகும். இந்த ப்ளாக் மூன் நிகழ்வின் போது வானில் பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. ஒவ்வொரு 32 மாதங்களுக்கும் ஒரு முறை இந்நிகழ்வு நடக்கும்.
ப்ளட் மூன் (Blood Moon):
ப்ளட் மூன் என்பது சந்திர கிரகணத்தின் போது தோன்றும் ஒன்றாகும். பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்து நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். இதனையே ப்ளட் மூன் என்று சொல்கின்றார்கள். சூரிய கிரகணத்தைப் பார்ப்பதைப் போல் இல்லாமல் கருவிகள் இன்றி நேராடியாகவே இந்த ப்ளட் மூனினை காணலாம். வருகின்ற ஜூலை 27ம் தேதி இந்நிகழ்வு நடைபெற இருக்கின்றது. இந்த நூற்றாண்டில் நடைப்பெற இருக்கும் மிக நீண்ட சந்திர கிரகணம் ஆகும்.
சூப்பர் மூன் (Super Moon):
இது பூமிக்கு மிக அருகில் தோன்றும் பௌர்ணமி நிலவாகும். சூப்பர் மூன், 30% பிரகாசமாகவும், 14% பெரியதாகவும் தோன்றும். ஜனவரி 31ம் தேதி தோன்றிய பௌர்ணமி நிலவு சூப்பர் மூன் ஆகும். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் புள்ளி பெரிகீ எனப்படும்.