X

வினை தந்திரம் கற்போம் : தேர்தலின் போது வீட்டிலிருந்தே ஓட்டுப்போட முடியுமா?

நாங்கெல்லாம் அந்த காலத்தில, ஓட்டுச்சாவடிக்கு போய் ஓட்டு போடுவோம்; விரல்ல மை எல்லாம் வைப்பாங்க தெரியுமா

மகேஷ் கேசவபிள்ளை

மந்திரம் கற்போம்வினை தந்திரம் கற்போம்
வானையாளப் போம்கடல் மீனை அளப்போம்.
என்றான் பாரதி.

புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி, முக்கியமாக அவற்றின் பயன்பாடுகளையும், அடிப்படை விளக்கங்களையும் எளிய மொழியில் விவாதிக்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். இதன் மூலம், அந்த தொழில்நுட்பத்தை பயில முனைவோர், அதில் ப்ராஜெக்ட் (Project) செய்ய முற்படுவோர் அது தொடர்பான பணியில் ஈடுபட்டிருபோர், பொதுவாக நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் கொண்டோர் இவர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்வதே இலக்கு. ஒவ்வொரு சனிக்கிழமையும் வினை தந்திரம் கற்கலாம்.
————————–

தேர்தலில் அடுக்குச்சங்கிலி தொழில்நுட்பம்!

சமீப காலங்களில் டாப் ட்ரெண்டில் இருக்கும் தொழில் நுட்பங்களில் அடுக்கு சங்கிலி (Blockchain) முக்கியமானது. அடுக்கு சங்கிலி பற்றி அறியாதவர்கள் கூட பிட்காயின் (Bitcoin) பற்றி கேள்விப்படாமல் இருக்க வாய்ப்பில்லை. பிட்காயின் அடுக்கு சங்கிலியின் பயன்பாடுகளில் ஒன்று.

இந்த கட்டுரையில் அடுக்கு சங்கிலி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல் நடத்துவது பற்றி பார்ப்போம்.

அததற்குமுன் அடுக்கு சங்கிலி தொழில்நுட்பம் பற்றி ஒரு முன்னோட்டம் பொதுவாக இன்று நீங்கள் பயன்படுத்தும் அனைத்து இணைய சேவைகளும் அவற்றுக்குரிய மையத் தலைமையின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறன. இது மின்னஞ்சல் (ஈமெயில்), சமூக வலயம், வங்கி சேவை உட்பட அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும். இவற்றின் அத்தனை தகவல்களும் அடங்கிய தரவு தளங்கள் (database) ஒரு மைய சேவையகத்தில் (server) இருக்கும்.

இந்த சர்வர், அமைப்பு வழங்கியின் (system provider) தரவு மையத்தில் (data center) இருக்கும். அத்தனை சேவைகளையும் நிர்வகிக்கும் (governance) அதிகாரம், உரிமைகள் மற்றும் தனி உரிமைகள் (rights and privileges) அமைப்பு-நிர்வாகியிடமே (system administrator) இருக்கும். இத்தகைய அதிகார குவிப்பு எப்போதும் நல்ல பலன்களை தருவதில்லை (இது அரசியல், ஆட்சி அதிகாரங்களுக்கும் பொருந்தும்தானே). இதில் இருக்கும் ஆபத்துகளில் ஒன்று எளிதில் hack செய்யப்படக்கூடிய வாய்ப்பு. அப்படி hack செய்யப்படும் பட்சத்தில் அத்தனையும் முடங்கிப் போகும் அபாயம் இருக்கிறது.

அடுக்கு சங்கிலி இதற்கு நேர் எதிரான மையக்குவிப்பற்ற (decentralized) தத்துவத்தை பின்பற்றக்கூடியது. இதன் அடிப்படை, தரவுத்தளம் ஒரு மையத்தில் அமைந்திருப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு கணினியிலும் நகலெடுக்கப்பட்டு வீற்றிருக்கும். இதை பரவலாக்கப்பட்ட ஆன்லைன் பேரேடு (Distributed Online Ledger) என்றும் கூறலாம்.

இதை வேறு வகையில் விவரிக்க வேண்டுமெனில், இவ்வாறு சொல்லலாம்: ஓர் அடுக்கு சங்கிலியில் என்னென்ன அடுக்குகள் (தரவு) என்ன பாங்கில் இருக்கிறன்றனவோ, அதே தரவுகள் அதே பாங்கில் சேமிக்கப்படும் (identical) . இவ்வாறு அடுக்கு சங்கிலியில் தரவு சேமிப்பு மட்டுமின்றி விநியோகமும் (serve) பரவலாக்கப்பட்டிருக்கும் (distributed).

தலைவர் கையில் சாவி இருந்தால் பாதுகாப்பல்ல என்று அதை நகலெடுத்து இணைப்பில் இருக்கும் எல்லோருக்கும் கொடுத்து விட்டால் எப்படி பாதுகாப்பாக இருக்கும்; logic-கே இல்லையேப்பா என்று கேட்கும் சந்தேகப் பிராணிகளுக்கு சில விளக்கங்கள்:

இவை “சங்கிலி புங்கிலி கதவை திற” என்று சொன்னால் திறக்கும் தரவுப்பெட்டகங்கள் அல்ல. மாறாக பொது திறவுகோல் (Public key ), தனி திறவுகோல் (Private Key) என்ற குறியாக்க (Cryptograhy) முறையால் பாதுகாக்கப்பட்டவை.

மேலும், ஒரு hacker ஒரு தொடரில் ஒரு மாறுதல் செய்ய முற்பட்டால், அதே மாறுதலை அனைத்து கணினிகளிலும் செய்ய வேண்டும். அத்தனை கணினிகளும் சரிபார்த்து, அந்த மாறுதலுக்கு ஒப்புதல் (approve) அளிக்க வேண்டும். அத்தனை நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொடர்களையும் hack செய்வது அவ்வளவு சுலபமான வேலை இல்லை.

இதன் மற்றொரு சிறப்பம்சம் Mutability. அடுக்கு சங்கிலியில், திருத்தம் என்பது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று (எந்த மொழியிலும் அதற்கு பிடிக்காத வார்த்தை திருத்தம்). நீக்கம் (deletion) என்பதே இதில் கிடையாது. ஒவ்வொரு முறையும் புதிய வரிசையைதான் சேர்க்க முடியும். இந்த சேர்க்கை எல்லா தொடரிலும் நிகழ வேண்டும்.

இந்த அடிப்படை தகவல்களுடன், அடுக்குச் சங்கிலி தொழில்நுட்பத்தை தேர்தலில் பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.

முதலில் வாக்காளர் online-ல் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து, தனது அடையாளத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவரது ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவருடைய திறவுகோலுடன் (user key) தொடர்புடைய அடுக்குச் சங்கிலியில் வாக்குரிமை பதிவு செய்யப்படும். பின்னர் அந்த வாக்காளருக்கு மின்னணு அடையாளம் (digital ID) அல்லது சீட்டு (token) வழங்கப்படும்.

இந்த சீட்டின் மூலம் தனது வாக்கை வாக்காளர் பதிவு செய்ய வேண்டும். இது அத்தனையும் இருந்த இடத்திலிருந்த இருந்தபடியே மொபைல் அல்லது கணினி மூலம் செய்ய முடியும். வாக்குப்பதிவு முடியும் வரை ஏற்கனவே செலுத்திய வாக்கை மாற்றி செலுத்தவும் முடியும். கடைசியாக பதிவு செய்த வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

முன்பே குறிப்பிட்டதைப்போல் அடுக்குச் சங்கிலி ஒரு லெட்ஜெர். அடுக்குச் சங்கிலியில் ஒவ்வொரு ஓட்டும் ஒரு பரிவர்த்தனையாக (Transaction) பதிவு செய்யப்படும். தணிக்கை சோதனை (Audit Trail) மற்றும் வாக்காளரின் ரகசியம் பாதுகாக்கப்படுதல் போன்ற அம்சங்கள் குறிப்பிடத் தக்கவை.

வாக்குப் பதிவு முடிந்ததும் ஒரு மத்திய அமைப்பு வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றில்லை. முன்பே சொன்னது போல், அடுக்குச் சங்கிலியில் தரவுகள் மத்தியில் ஒரு பெட்டியில் மட்டும் சேமித்து வைக்கப்படுவதில்லை. அடுக்கச் சங்கிலியில் ஒவ்வொரு வாக்காளரின் mobile அல்லது கணினியும் ஒரு வாக்குகளை சேமிக்கும் வாக்குப்பெட்டியே.

வாக்கு எண்ணிக்கைக்கான கதவு திறக்கப்பட்டதும், ஒவ்வொரு வாக்காளரும் தனது தகவல் பெட்டியை திறந்து மொத்த வாக்கு எண்ணிக்கையையும் அறிந்து கொள்ள முடியும். மத்திய ஆணைக்குழுஅறிவிக்கின்ற முடிவுகள் தனது எண்ணிக்கையுடன் ஒத்துப் போகிறதா என சரிபார்த்துக்கொள்ள முடியும்.

இப்போதுள்ள மின்னணு வாக்கு எந்திர (EVM) முறையின் மீதுள்ள பெரிய குற்றச்சாட்டு, அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பை நிர்பந்தித்து tampering செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதே. இது அடுக்குச்சங்கிலி முறையில் சாத்தியம் இல்லை.

இந்த முறையில் குறைபாடுகளே இல்லையா என்றால், நிச்சயம் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. உள்கட்டமைப்பு வசதிகள், இணையம் அல்லது மொபைல் செயலி (Moblie App) பயன்பாட்டை பெருக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சரி செய்து புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வதே சரியான வழியாக இருக்கும். சிறிய அளவில் நடக்கும் தேர்தல்களுக்கு பரீட்சாத்திர முறையில் முயற்சி செய்து பார்க்கலாம்.

இன்று எத்தனையோ பண பரிவர்த்தனைகள் online-ல் நடந்து கொண்டிருக்கிறன்றன. Hack செய்யப்படும் அபாயங்கள் இருப்பதால், மின்னணு பரிவர்த்தனை தொழில்நுட்பத்தை புறந்தள்ளிவிட முடியாது.
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார்? என்ற கம்பனின் வார்த்தைக்கு இணங்க புதிய தொழில் நுட்பங்களை வரவேற்போம்

சில நாடுகளும், அமைப்புகளும் அடுக்குச்சங்கிலி வாக்கெடுப்பு முறையை செய்து பார்த்து விட்டார்கள். கொலம்பியாவில், சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சமாதான உடன்படிக்கை குறித்து பொது வாக்கெடுப்பு (Plebiscite) ஒன்று நடத்தப்பட்டது. இதில் புலம் பெயர்தவர்களின் கருத்தையும் அறிய வேண்டி, அடுக்குச்சங்கிலி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தினார்கள். சில தினங்களுக்கு முன் (ஜூலை இரண்டாம் தேதி) ஸ்விட்சர்லாண்டில் இருக்கும் ஸுக் (Zug) நகராட்சி அடுக்குச்சங்கிலி முறையில் வெற்றிகரமாக ஒரு வாக்கெடுப்பை நடத்தியதாக அறிவித்திருக்கிறது. மேலும் பல நாடுகளும், அமைப்புகளும் இதை முயன்று பார்த்து வருகிறார்கள். இந்தியாவில் கூட அடுக்குச்சங்கிலி வாக்கெடுப்பு செயலிகளையும், Platforms-ஐயும் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் இருக்கின்றன.

நாங்கெல்லாம் அந்த காலத்தில, ஓட்டுச்சாவடிக்கு போய் ஓட்டு போடுவோம்; விரல்ல மை எல்லாம் வைப்பாங்க தெரியுமா என்று நாம் இளையவர்களிடம் ‘பெருமை’ பேசும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

மீண்டும் மற்றொரு தொழில்நுட்பத்தில் சந்திப்போம்.

Web Title:

Can learn vantage trick can you live from home at election

Next
Just Now
X