/indian-express-tamil/media/media_files/2025/08/02/edible-gold-2025-08-02-21-21-33.jpg)
24 காரட் தங்கம் இனி உங்கள் தட்டிலும்... உடல் ஏற்கிறதா? சுவை மாறுமா? நீங்கள் அறியாத உண்மைகள்!
ஆபரணமாக, செல்வச் செழிப்பின் அடையாளமாக நாம் அறிந்திருக்கும் மின்னும் உலோகமான தங்கம் இப்போது தட்டுகளிலும் இடம்பிடித்து விட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! சில நாடுகளில், குறிப்பாக ஆடம்பர உணவுகளில், உண்ணக் கூடிய தங்கம் (Edible Gold) பயன்படுத்தப்படுகிறது.
உண்ணக்கூடிய தங்கம் என்பது 24 காரட் தூய தங்கத்தை மிக மெல்லிய தங்க இலைகளாக (gold leaf) மாற்றிப் பயன்படுத்தும் ஒரு நுட்பம். இவை சில மைக்ரோமீட்டர்கள் (ஒரு மைக்ரோமீட்டர் என்பது ஒரு மில்லியனில் ஒரு மீட்டர்) மட்டுமே தடிமன் கொண்ட மெல்லிய தாள்கள். இந்த தங்க இலைகளை இனிப்புகள், பானங்கள், கேக்குகள், மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களின் மேல் அலங்காரமாகப் பயன்படுத்துகிறார்கள். கற்பனை செய்து பாருங்கள், இனிமையான சாக்லேட் கேக்கின் மேல் மின்னும் தங்க இலைகள் (அ) சிறப்பு பானத்தின் நுரையில் மிதக்கும் தங்கத் துகள்கள்... இது உணவுக்கு அற்புதமான, ராஜரீகமான தோற்றத்தை அளிக்கிறது. பார்ட்டி, திருமணங்கள் (அ) சிறப்பு நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவுகளுக்கு இது தனித்துவமான பிரகாசத்தைச் சேர்க்கிறது.
பலருக்கு எழும் முதல் கேள்வி, "இது சுவையை மாற்றுமா?" என்பதுதான். இல்லை, உண்ணக்கூடிய தங்கம் உணவின் சுவையை எந்த விதத்திலும் மாற்றுவதில்லை. தங்கத்திற்கு தனிப்பட்ட சுவை அல்லது மணம் இல்லை. இது "சுவையற்ற அலங்காரப் பொருள்" என்று கூறலாம். இதை சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும்? இது தீங்கு விளைவிக்குமா? நிச்சியமாக இல்லை! அறிவியல் ரீதியாக, தங்கம் ரசாயன ரீதியாக வினைத் திறன் அற்ற உலோகம் (Chemically Inert Metal). அதாவது, அது மற்ற பொருட்களுடன் எளிதில் வினைபுரிவதில்லை. எனவே, நீங்கள் தங்கத்தை உண்ணும்போது, அது உங்கள் செரிமான மண்டலத்தில் எந்த வேதியியல் மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. உடல் அதை உறிஞ்சுவதில்லை, அது செரிக்கப்படாமல், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் உடலில் இருந்து வெளியேறிவிடும்.
உண்ணக்கூடிய தங்கம் என்பது வெறும் ஆடம்பரத்தின் சின்னம் மட்டுமல்ல. இது உலோகவியலின் முன்னேற்றத்திற்கும், உணவு அறிவியலில் உள்ள சாத்தியக்கூறுகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. தூய தங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் விஷத்தன்மை அற்ற தன்மை ஆகியவைதான் இதை உண்ணக்கூடிய பொருளாக மாற்ற அனுமதிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.