Chandrayaan 2 enters lunar orbit : ஜூலை 22ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இயங்கி வந்த இந்த விண்கலம், நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி பயணிக்க துவங்கியது. அதில் இன்று காலை வெற்றியும் பெற்றிருக்கிறது சந்திரயான். இதனால் தற்போது ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Chandrayaan 2 enters lunar orbit ட்வீட் செய்த இஸ்ரோ
புவியின் சுற்றுவட்டபாதையில் இருந்து விலகிய சந்திரயான் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையை இன்று காலையில் நெருங்கியது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள சுமார் 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. இன்று காலை 9 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தடம் பதித்தது சந்திரயான் 2.
ஜூலை 23ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 6ம் தேதி வரை தன்னுடைய சுற்றுவட்டப்பாதையை 5 முறை உயர்த்தியுள்ளது சந்திரயான் 2. இன்று காலை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இடம் பெயர துவங்கியுள்ளது இந்தியாவின் சந்திரயான் 2. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நாளை முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை பயணிக்கும் சந்திரயான் 2.
ஆர்பிட்டர் நிலவின் 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருந்து நிலவினை கண்காணித்து வரும். செப்டம்பர் 2ம் தேதி சந்திரயான் 2ல் இருந்து பிரிந்து வெளியேறும் லேண்டர் விக்ரமும், ரோவர் பிரக்யானும் நிலவின் மேற்பரப்பில் செப்டம்பர் 7ம் தேதி தரையிறங்கும்.
நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலம் சந்திரயான் 2 ஆகும். நிலவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து கால் தடம் பதிக்கும் நான்காவது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் ஒரு நிலத்தில் நிலையாக நின்றுவிடும். ஆனால் ரோவரான ப்ரக்யான் தன்னுடைய 6 சக்கரங்களின் உதவியுடன் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை இஸ்ரோவிற்கு அனுப்பும். லேண்டரும் ரோவரும் ஒரு லூனார் நாளில் மட்டுமே (14 நாட்கள்) இயங்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சந்திரயானின் 48 நாட்கள் பயணம் எப்படிபட்டது?