Johnson T A
Chandrayaan 2 Misson moon team members : சந்திரயான் 2 உருவாக்கத்திற்கும், அது வெற்றிகரமாக 95% பயணத்தை முடித்ததிற்கும் காரணமாக இருந்தவர்கள் இந்த ஜாம்பவான்கள் தான். உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்திருந்த இந்த மிஷன் தோல்வியை அடைந்திருந்தாலும், இவர்கள் 130 கோடி மக்களுக்கும் நம்பிக்கை அளித்தவர்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை ஒரு படி மேலே எடுத்துச் சென்றவர்கள் இவர்கள் தான்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
கே. சிவன், இஸ்ரோ சேர்மென்
தமிழகத்தை சேர்ந்த இவர், ஐ.ஐ.டி. மெட்ராஸில் ஏரோநாட்டின் எஞ்சினியரிங் முடித்தவர். தன்னுடைய பட்ட மேற்படிப்பை இந்திய அறிவியல் மையத்தில் ஏரோஸ்பேஸ் துறையில் முடித்தார். ஐஐடி பாம்பேயில் பிஎச்டி பட்டம் பெற்றார். இஸ்ரோவில் 36 வருடங்களாக பணியாற்றியவ.ர் 2018 ஆம் ஆண்டு இஸ்ரோவின் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும் லிக்விட் ப்ரொபல்சன் சிஸ்டம்ஸ் சென்டரிலும் இயக்குனராகவும் பணியாற்றியவர்.
இந்தியாவின் கனரக ராக்கெட்டுகளான ஜி.எஸ்.எல்.வி 2 மற்றும் 3க்கு ஆதரமாக இருந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட்களை தயாரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ரியல் - டைம், நான் ரியல் டைம் ட்ராஜெக்டர் சிமுலேசன் சிஸ்டம்களை இயக்கும் சிதாரா (SITARA) என்ற சாஃப்ட்வேர் உருவாக்கத்திற்கான தலைமை வடிவமைப்பாளராக செயல்பட்டார் இவர்.
ஏவுகணை வடிவமைப்பு குழு
சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இயக்குநர்
சோமநாத் இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான ராக்கெட் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். இஸ்ரோவின் பாகுபலி ஆன ஜிஎஸ்எல்வி மார்க் 3 உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் இவர். சந்திரயான் 2-ஐ விண்ணில் ஏவ உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டை உருவாக்கிய இவரது குழு, ஜூலை 15ம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாற்றினை கண்டறிந்து பழுது நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணையைக் கொண்டு தான், இந்தியாவின் ககன்யான் திட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் 2022ம் ஆண்டு நிறைவேற்ற உள்ளனர்.
த்ரோட்டல் வகை எஞ்சின்கள் உருவாக்கம் தான் இந்த குழுவின் மிக முக்கியமான வேலை. தற்போது சந்திரயான் - 2ல் இந்த த்ரோட்டல் எஞ்சின் லேண்டரில் பொருத்தப்பட்டது. வரும் காலங்களிலும் இவ்வகை எஞ்சின்கள் பொருத்தப்படும். இந்த த்ரோட்டல் வகை எஞ்சின்களால் தான் அசுர வேகத்தில் சுற்றி வந்த லேண்டர் சில நிமிடங்களில் தன்னுடைய வேகத்தை குறைத்துக் கொண்டது. 30 வருடங்களுக்கும் மேலாக இந்திய விண்வெளித்துறையில் பணியாற்றி வருகிறார் சோம்நாத். ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் துறையில் மேற்படிப்பை ஐ.ஐ.எஸ்.சி-யில் முடித்தார்.
லிக்விட் ப்ரோப்ல்சன் சிஸ்டம் இயக்குநர் வி. நாராயணன்
ஜி.எஸ்.எல்.வி விண்ணில் ஏவப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்த இரண்டு எஞ்சின்களான எல்110 மற்றும் சி25 ஸ்டேஜ் க்ரயோஜெனிக் எஞ்சின்கள் இரண்டையுமே லிக்விட் ப்ரோபல்சன் சிஸ்டம் மையம் உருவாக்கியது. க்ரயோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பத்தின் வல்லுநராக செயல்பட்டு வருகிறார் இந்த துறையின் இயக்குநரான வி.நாராயணன்.
ஸ்பேஸ்கிராஃப்ட் குழு
எம். வனிதா, ப்ரோஜெக்ட் டிரைக்டர்
சிஸ்டம் கம்யூனிகேசன் எஞ்சினியரான இவர் சந்திரயான் 2 திட்டத்தில் இணைந்த முதல் பெண் இயக்குநர் ஆவார். 20 மாதங்களுக்கு முன்பு சந்திரயான்- 2க்கான ப்ரோஜெக்ட் இவரிடம் கொடுக்கப்பட்டது. சிஸ்டம் உருவாக்கம், மறு பரிசோதனை, அசம்பெளி என அனைத்திற்கும் இவரிடம் தான் அனுமதி பெற வேண்டும். ப்ரோஜெக்ட் டிரைக்டராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு அவர் இத்திட்டத்தின் அசோசியேட் டிரைக்ட்ராக பணியாற்றினார்.
வனிதா 2006ஆம் ஆண்டு சிறந்த பெண் ஆராய்ச்சியாளருக்கான அஸ்ட்ரோநாட்டிக்கல் சொசைட்டி விருதினைப் பெற்றார். மேலும் சர்வதேச அறிவியல் இதழில் நேச்சர் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் வனிதா.
ரித்து கரிதல், மிஷன் ட்ரைக்டர்
லக்னோவை சேர்ந்த இந்த ஆராய்ச்சியாளர் சந்திரயான் 2 விண்வெளிப் பயணத்தையும் உருவாக்கி அதனை மேற்பார்வையிட்டவர். சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது வரை முதல் நிலவில் தரை இறங்குவதற்கான எடுக்கப்பட்ட முயற்சி வரை அனைத்தையும் மேற்பார்வையிட்டு வந்தவர் இவர். 2013-14 காலகட்டங்களில் மங்கள்யான் ப்ரோஜெக்டில் ஆப்ரேஷன் டைரக்டராக பணியாற்றினார். இஸ்ரோவின் மங்கள்யான் ப்ராஜெக்டில் மிஷன் டைரக்டர் கேசவராஜூவுக்கு துணையாக பணிகளை மேற்பார்வையிட்டார். ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங்க் மேற்படிப்பை ஐ.ஐ.எஸ்.சியில் முடித்தார் இவர்.
குன்ஹி கிருஷ்ணன், யூ.ஆர். ராவ் மையத்தின் இயக்குநர்
சந்திரயான் விண்கலத்துக்குள் வைக்கப்பட்ட மூன்று முக்கிய அம்சங்களான லேண்டர், ரோவர் மற்றும் ஆர்பிட்டரை உருவாக்கியவர் இவர். சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை இருந்த போதே இதற்கான பணிகள் துவங்கின. ஆனார் ரஷ்யா தன்னுடைய ஆதரவை திருப்பிப் பெற்ற பின்பு, அனைத்தையும் முதலில் இருந்து துவங்கியது இஸ்ரோ. இவருடைய பங்கு இதில் மிகப் பெரியது.
பி.எஸ்.எல்.வி ராக்கெட் திட்டக்குழுவின் இயக்குநராக பணியாற்றிய இவரின் 2010 முதல் 2015 வரையிலான தலைமையின் கீழ் 13 முறை பி.எஸ்.எல்.வி ராக்கெட்கள் வெற்றி கரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அதில் மங்கள்யானும் அடங்கும்.
வி.வி.ஸ்ரீனிவாசன், ஐ.எஸ்.டி.ஆர்.ஏ.சி மையத்தின் இயக்குநர்
பெங்களுருவில் இயங்கி வரும் இந்த மையத்தில் தான் மிகப் பெரிய அளவிலான ரிசீவர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் கிரௌண்டில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ரிசீவர்கள் வாயிலாக தான் சந்திரயான் - 2ல் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் பெறப்படும். ஒரு வேளை லேண்டரும், ரோவரும் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்பட்டிருந்தால் அவ்விரு கருவிகளும் இம்மையத்தைத் தான் தொடர்பு கொள்ளும். வி.வி.ஸ்ரீனிவாசன் இங்கு சில ஆண்டுகளாக கம்யூனிகேசன் எஞ்சினியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.