தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் எனப்படும் நாசா, நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் உதிரி பாகங்களை தங்களது கேமரா படம் பிடித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்திய கம்ப்யூட்டர் புரோகிராமர் மற்றும் இயந்திர பொறியியலாளர் சண்முக சுப்பிரமணியன் நாசாவின் திட்டத்தைத் தொடர்பு கொண்ட பின்னர் நாசா அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. பின்னர் முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிட்டு அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
"சண்முக சுப்பிரமணியன் எல்.ஆர்.ஓ திட்டத்தின் பாகங்களை அடையாளம் கண்டு தொடர்பு கொண்டார். இந்த உதவிக்குறிப்பைப் பெற்ற பிறகு, எல்.ஆர்.ஓ.சி குழு, படங்களுக்கு முன்னும் பின்னும் ஒப்பிட்டு அதன் அடையாளத்தை உறுதிப்படுத்தியது” என்று நாசா கூறியது. பிரதான இடத்திலிருந்து வடமேற்கே 750 மீட்டர் தொலைவில், இந்த உதிரி பாகங்கள் சண்முகத்தினால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா மேலும் தெரிவித்தது.
நிலவின் மேற்பரப்பில் லேண்டரை ‘அத்தனை நெருக்கமானதாக’ செலுத்த இஸ்ரோ மேற்கொண்ட முயற்சியையும் நாசா பாராட்டியது. ”துரதிர்ஷ்டவசமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிடப்பட்டபடி நிலவை தொடுவதற்கு சற்று முன்பு (இந்தியாவில் செப்டம்பர் 7, அமெரிக்காவில் செப்டம்பர் 6) லேண்டருடனான தொடர்பை இழந்தது. இருந்தபோதிலும், மேற்பரப்புக்கு நெருக்கமாக செலுத்தியது ஒரு அற்புதமான சாதனை” என்று நாசா தெரிவித்துள்ளது.