Chandrayaan-2 Vikram Lander separates from Orbiter : ஜூலை மாதம் 22ம் தேதி நண்பகல் 2 மணி 43 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 2. இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டு இன்றுடன் 42 நாட்கள் ஆகின்ற நிலையில் ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் தனியாக பிரிந்து சந்திரனை நோக்கி நகரத்துவங்கியுள்ளது.
Chandrayaan-2 Vikram Lander separates from Orbiter - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆர்பிட்டர் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு முழுமையாக இயங்கி வரும். இந்நிலையில் வருகின்ற 6 அல்லது 7 தேதிகளில் நிலவில் லேண்டர் விக்ரம் தரையிரங்கிவிடும். நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுத் தர உள்ளது சந்திரயான் 2. அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனாவைத் தொடர்ந்து நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையையும் இது தக்கவைக்க உள்ளது.
மேலும் படிக்க : சந்திரயான் 2 : புதிய சரித்திரம் படைக்க இருக்கும் 48 நாள் பயணம்!
இன்று மதியம் 01 மணி 15 நிமிடங்களுக்கு சந்திரயான் விண்கலத்தில் இருந்த்து ரோவர் ப்ரக்யானுடன் வெளியேறியது லேண்டர் விக்ரம். தற்போது 109 கி.மீ (குறைந்தபட்ச தொலைவு) மற்றும் 120 கி.மீ (அதிகபட்ச தொலைவு) என நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவருகிறது லேண்டர். தன்னுடைய சுற்றுவட்டப்பாதையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள இருக்கும் லேண்டர் 6 அல்லது 7ம் தேதி நிலவில் தரையிறங்கும். அங்கிருந்து எங்கும் நகராமல் அப்படியே நிலைத்து நிற்கும். ஆனால் அதில் இருந்து வெளியேறும் ரோவர் நொடிக்கு 1 செ,மீ என்ற வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சியை நடத்த உள்ளது.