Chandrayaan 3: சந்திரனில் இரவு நெருங்கி வருவதால், சந்திரயான்-3 திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் நம்பிக்கை மங்கி வருகிறது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் அடங்கிய இந்த விண்கலம் செப்டம்பர் 2ம் தேதி முதல் தூக்க நிலையில் உள்ளது.
இந்த நிலையில், ஷிவ் சக்தி பாயிண்டில் சூரிய ஒளி திரும்பியதிலிருந்து லேண்டர்-ரோவர் இரட்டையருடன் இணைக்க இஸ்ரோ முயன்றது, ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இருப்பினும், செப்டம்பர் 30 ஆம் தேதி சந்திர இரவு தொடங்க உள்ள நிலையில், விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
சந்திர இரவு, சுமார் 14 நாள்கள் நீடிக்கும். அக்காலக்கட்டத்தில் கடுமையான குளிர் மற்றும் முழுமையான இருளால் சூழ்ந்து இருக்கும். இந்தக் காலகட்டத்தில், சந்திர மேற்பரப்பில் வெப்பநிலை சுமார் மைனஸ் 180 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து காணப்படும். ஆகையால், எந்தத் தொழில்நுட்பமும் செயல்படாது.
மேலும், விக்ரம் மற்றும் பிரக்யனுக்கு இது மிகவும் சிக்கலானது, ஏனெனில் அவை தங்களின் செயல்பாட்டிற்கு சூரிய ஒளியை நம்பியுள்ளன.
இதற்கிடையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முன்பு சந்திர இரவின் கடுமையான சூழ்நிலையில் விண்கலம் தப்பிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது.
அப்போது, "இது ஒரு இரவில் உயிர் பிழைத்தால் இன்னும் பல சந்திர இரவுகளில் அது உயிர்வாழும்" என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் முன்பு கூறியிருந்தார்.
எனினும், சந்திர இரவு நெருங்கி வருவதால், இந்த நம்பிக்கைகள் மங்கத் தொடங்குகின்றன. சந்திராயன்-3, சந்திரன் ஆய்வுக்கான இந்தியாவின் துணிச்சலான பயணத்தை பிரதிபலிக்கிறது, ஆகஸ்ட் 23 அன்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“