இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி அதன் பின் பிரக்யான் ரோவரும் வெளி வந்து நிலவில் ஆய்வு செய்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும் பிரக்யான் ரோவர் நிலவில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்தன.
தொடர்ந்து நிலவில் இரவு தொடங்கிய நிலையில் செப்.4-ம் தேதி விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் உறக்கநிலையில் வைக்கப்பட்டது. இதன் பின் நிலவில் மீண்டும் சூரிய உதயம் ஏற்பட்டதும் செப்.22-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை எழுப்ப முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை சிக்னல் ஏதும் கிடைக்கவில்லை. நிலவில் கடுமையான குளிர் இருக்கும். -200 செல்சியஸ் என்ற அளவில் கடுங்குளிர் இருக்கும்.
இந்த குளிரை தாங்கும் வகையில் சந்திரயான் 3 கருவிகள் வடிவமைக்கப்படவில்லை. 1 சந்திர நாள் (பூமியில் 14 நாட்கள்) சூரிய ஒளி இருக்கும் போதும் மட்டும் செயல்படும்படி கருவிகள் வடிவமைக்கப்பட்டது.
இருப்பினும் விஞ்ஞானிகள் சந்திரயான் 3 லேண்டர், ரோவரை எழுப்ப தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் கூறுகையில், விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவரை எழுப்ப சிறிய வாய்ப்பு கூட இஸ்ரோவுக்கு உதவும். இவைகளை செயல்பட வைக்க இஸ்ரோ கடைசி நாள் வரை முயற்சி செய்யும் என்றார்.
சந்திரயான் -3 இன் முன்னணி மையமான யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனர் எம் சங்கரன் கூறுகையில், “லேண்டர் மற்றும் ரோவர் எழுந்திருக்கவில்லை. அடுத்த 14 நாட்களில் இந்த சந்திர இரவு முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றாலும், அந்த ஆப்ஷனை நாங்கள் நிறுத்தவில்லை.
இந்த பணியானது ரிமோட் சென்சிங் அல்லது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் போன்றது அல்ல என்பதால், விக்ரம் மற்றும் பிரக்யான் பேலோடுகளின் தரவுகளின் அளவு பெரியதாக இருக்காது, ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் முதல் நாளில் வேலை செய்தபோது நாம் பெற்ற விளைவுதான். . தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது, ”என்று சங்கரன் கூறினார். உந்துவிசை தொகுதி பேலோடில் இருந்து போதுமான தரவு சேகரிக்கப்பட்டுள்ளது - ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹாபிடபிள் பிளானட் எர்த் (ஷேப்) - இது சந்திரனைச் சுற்றி வரும்போது பூமியின் வாழக்கூடிய கிரகம் போன்ற அம்சங்களை குறிப்பாக ஆய்வு செய்யும்.
தொடர்ந்து லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி புள்ளியில் சூரிய வெளிச்சம் மெல்ல மறையத் தொடங்கி உள்ளது. தென்துருவத்தில் அக்.6-ம் தேதி மீண்டும் இரவு தொடங்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“