நிலவின் தென்துருவத்தில் உள்ள இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை சிக்னல் ஏதும் கிடைக்காதது கவலையை எழுப்புகிறது.
நிலவின் தென்துருவத்திற்கு அனுப்பபட்ட இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்திற்கு அருகில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கி பின் அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து நிலவில் வெற்றிகரமாக நகர்ந்து சென்று ஆய்வு செய்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், பிரக்யான் ரோவர் சுமார் 100 மீட்டர் நகர்ந்து பள்ளங்கள், தடைகளை தவிர்த்து வெற்றிகரமாக ஆய்வு செய்தது.
கடுங்குளிர்
ஒரு சந்திர நாள் (பூமியில் 14 நாட்கள்) ஆய்வுகளை மேற்கொண்டது. நிலவின் வெப்பநிலை, சல்பர், இரும்பு, ஆக்ஸிஜன் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதையும் இந்த திட்ட ஆய்வு உறுதி செய்தது. இதையடுத்து நிலவில் இரவு தொடங்கிய நிலையில் செப்.2-ம் தேதி லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது. நிலவில் இரவில் கடும் குளிர் -200 முதல் -250 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சந்திரயான் 3 இந்த வெப்பநிலைக்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட வில்லை. இருப்பினும் அவை சூரிய ஒளியில் சார்ஜ் செய்யப்பட்டு உறக்க நிலையில் வைக்கப்பட்டது.
அடுத்த சந்திர இரவு
இந்த நிலையில் செப்.22-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் மீண்டும் சூரிய உதயம் தொடங்கி உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்க தொடர்பு கொண்டு வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை சிக்னல் கிடைக்கவில்லை. அடுத்த சந்திர இரவு வரும் வரை அதாவது செப்.30-ம் தேதி வரை விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானி கூறுகையில், சந்திரயான் 3 கருவிகள் நிலவின் கடும் குளிரில் தக்க வைத்துக்கொண்டால், புத்துயிர் பெற 50-50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் இந்த திட்டத்தின் நோக்கம் ஏற்கனவே அடைந்து விட்டது என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“