இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி பின்னர் அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து ஆய்வு செய்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும் பிரக்யான் ரோவர் நிலவில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்தது. நிலவில் ஆக்சிஜன், சல்ஃபர் போன்ற தனிமங்கள் இருப்பதை சந்திரயான் 3 திட்டத்தில் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து நிலவில் இரவு தொடங்கிய நிலையில் செப்.4-ம் தேதி லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலைக்கு மாற்றப்பட்டது. இதன் பின் செப்.22-ம் தேதி நிலவில் மீண்டும் சூரிய ஒளி கிடைத்ததும் லேண்டர், ரோவரை துயில் எழுப்ப விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை. இருப்பினும் சந்திரயான் 3 அதன் நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்தாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான் 3 விண்கலத்தின் கருவிகள் ஒரு சந்திர நாள் (14 பூமி நாட்கள்) மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இருப்பினும் பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் இஸ்ரோ மீண்டும் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறுகையில், லேண்டர் மற்றும் ரோவரை எழுப்ப இஸ்ரோ கடைசி சந்திர நாள் வரை முயற்சிக்கும். சந்திர மேற்பரப்பில் சில சோதனைகளை மீண்டும் செய்ய இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றார்.
அடுத்து என்ன செய்யப்படும்?
சந்திரயான்-3-ன் பிரக்யான், விக்ரம் ஜோடி எழுந்திருக்கவில்லை என்றால், "இது இந்தியாவின் சந்திர தூதராக எப்போதும் நிலவில் இருக்கும்" என்று இஸ்ரோ முன்பு கூறியது. விக்ரம் மற்றும் பிரக்யான் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. விக்ரம் லேண்டர், ரோவர் நிலவிலேயே வைக்கப்படும்.
எனினும் விக்ரம் லேண்டர் இருக்கும் தென்துருவத்தில் தற்போது சூரியன் மறையத் தொடங்கியுள்ளது. மீண்டும் இரவு வரத் தொடங்கி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“