இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி அதன் பின் பிரக்யான் ரோவரும் வெளி வந்து நிலவில் ஆய்வு செய்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும் பிரக்யான் ரோவர் நிலவில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்தன.
நிலவின் வெப்பநிலை, தனிமங்கள், ஆக்சிஜன், சல்ஃபர் இருப்பு பேன்றவைகளை ஆய்வு செய்து விண்கலம் தரவுகளை அனுப்பியது. விண்கலத்தின் 7 பேலோடு கருவிகளும் தனது வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ததாக இஸ்ரோ தெரிவித்தது.
தொடர்ந்து நிலவில் இரவு தொடங்கிய நிலையில் செப்.4-ம் தேதி விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் உறக்கநிலையில் வைக்கப்பட்டது. இதன் பின் நிலவில் மீண்டும் சூரிய உதயம் ஏற்பட்டதும் செப்.22-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை எழுப்ப முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை சிக்னல் ஏதும் கிடைக்கவில்லை. நிலவில் கடுமையான குளிர் இருக்கும். -200 செல்சியஸ் என்ற அளவில் கடுங்குளிர் இருக்கும். இந்த குளிரை தாங்கும் வகையில் சந்திரயான் 3 கருவிகள் வடிவமைக்கப்படவில்லை. 1 சந்திர நாள் (பூமியில் 14 நாட்கள்) சூரிய ஒளி இருக்கும் போதும் மட்டும் செயல்படும்படி கருவிகள் வடிவமைக்கப்பட்டது.
அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் விண்வெளித் துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் சந்திரயான் 3 திட்ட இயக்குநருமான விஞ்ஞானி வீரமுத்துவேல் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. எதற்காகாக விண்கலம் அனுப்பப்பட்டதோ அந்த மிஷனை விண்கலன் சிறப்பாக செய்து முடித்திருக்கிறது.
அதேபோல விண்கலனில் உள்ள கருவிகளும் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. இது ஒரு நிலவு நாள் மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. நம்மிடம் அணு பேட்டரி இல்லாத காரணத்தால் இரண்டாவது நிலவு நாளில் லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியவில்லை" என்று கூறினார்.
மேலும், நீண்ட எதிர்பார்ப்பு இருந்தும் மீண்டும் இவற்றை உயிர்த்தெழுப்ப முடியாமல் போனது சிறிய ஏமாற்றமாக இருந்தாலும், இஸ்ரோவின் திட்டம் மற்றும் விண்கலத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது என்றார்.
தொடர்ந்து லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி புள்ளியில் சூரிய வெளிச்சம் மெல்ல மறையத் தொடங்கி உள்ளது. தென்துருவத்தில் அக்.6-ம் தேதி மீண்டும் இரவு தொடங்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“