கார்கள் முதல் பெயின்ட் வரை; சந்திரயான் மென்பொருளை அன்றாட வாழ்வில் பயன்படுத்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

சந்திரயான் மென்பொருளை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய வகையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். விண்வெளித் துறையின் கீழ் உள்ள ஒரு சுயாதீன அமைப்பு 150 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chandrayan Tech

சந்திரயான்-3 தரையிறங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட மென்பொருளை, உங்கள் கார் விபத்தை தடுக்கப் பயன்படுத்த முடியுமா? விண்வெளியில் வழி பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட கேமராவில் உள்ள தொழில்நுட்பத்தை, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் கணக்கிட முடியுமா? இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட அரிப்பு எதிர்ப்பு வண்ணப்பூச்சுகளை, உங்கள் கூரையைப் பாதுகாக்கப் பயன்படுத்த முடியுமா?

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Chandrayaan software for cars to anti-corrosive paints: Tech from ISRO missions to find its way into daily lives

 

Advertisment
Advertisements

இந்தியாவில் தனியார் விண்வெளித் துறையை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் விண்வெளித் துறையின் கீழ் உள்ள ஒரு சுயாதீன அமைப்பான இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPAce), பல்வேறு இஸ்ரோ பணிகளுக்காக உருவாக்கப்பட்ட குறைந்தது 166 தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டுள்ளது, இவை பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

சில பொருட்கள் மற்றும் சென்சார்கள் ஏற்கனவே தங்கள் சொந்த ஏவு வாகனங்கள் அல்லது செயற்கைக்கோள்களில், விண்வெளி ஸ்டார்ட்-அப்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாகனம் மற்றும் கட்டுமானம் போன்ற தொழில்களுக்கு பல தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

“இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் இஸ்ரோவால் ஏவுகணை வாகனங்கள் அல்லது செயற்கைக்கோள்களில் இருந்தாலும், அதன் சொந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது, ​​​​அவை மற்ற துறைகளில் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, சந்திரயான்-3 தரையிறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கேமரா, மென்பொருள் மற்றும் அல்காரிதம்கள் விபத்தை தடுக்க வாகனத் துறையால் பயன்படுத்தப்படலாம். இதேபோல், ஏர்பேக்குகள் எப்போது திறக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க பயன்படுத்தப்படும் பிரஷர் சென்சார்கள் இதில் அடங்கும்” என்று IN-SPAce இன் தொழில்நுட்ப இயக்குநரகத்தின் இயக்குநர் ராஜீவ் ஜோதி, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்காக 79 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் பிரத்தியேகமற்றவை என்பதால், இந்த தொழில்நுட்பத்தை பல நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இருப்பினும் அறிவுசார் சொத்துரிமைகளை இஸ்ரோ தொடர்ந்து வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வு அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. செல்போன் கேமராக்கள், காற்று சுத்திகரிப்பான்கள் அல்லது அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரதிபலிப்பு போர்வைகள் போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்கள் அனைத்தும் நாசாவின் சொந்த பணிகளுக்கான ஆராய்ச்சியில் இருந்து வந்தவை.

IN-SPACe சமீபத்தில் அதன் தொழில்நுட்பங்களை வாகனத் துறையில் காட்சிப்படுத்தியிருந்தாலும், கட்டுமானம், தளவாடங்கள் மற்றும் மின்சாரம் போன்ற பல தொழில்களும் அவற்றின் பயன்பாட்டிலிருந்து பயனடையலாம் என்று இயக்குனர் ஜோதி கூறுகிறார்.

இது வழங்கும் தொழில்நுட்பங்களில் ஒன்று 3D LiDAR (ஒளி இமேஜிங் கண்டறிதல் மற்றும் ரேங்கிங்) கேமரா ஆகும். இது விண்வெளியில் வழி பார்ப்பதற்காக, விண்வெளி பயன்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்டது. ஃபிரேமில் உள்ள பல்வேறு பொருட்களின் ஆழம் குறித்த தகவலுடன், இந்த கேமரா ஒரு 3D படத்தை உருவாக்குகிறது. இந்தப் பொருட்களிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியை தொடர்புபடுத்தி கேமரா இந்தத் தகவலை வழங்குகிறது.

சந்தைகள் போன்ற அதிக நெரிசலான இடங்களில் மக்களைக் கண்டறிதல் மற்றும் கணக்கிடுதல், ஹெலிகாப்டர்களுக்கான நிலப்பரப்பு, விபத்துகளை தவிர்த்தல் என பல்வேறு பயன்பாடுகளை இந்தத் தொழில்நுட்பம் கொண்டிருக்கக்கூடும்.

சுகாதாரத் துறையில் இடுப்பு போன்ற உடல் பாகத்தின் அளவீடுகளை கணக்கிட்டு இந்த வகை கேமரா மூலம் நோய்களின் அபாயத்தை குறைக்க முடியும். மொபைல் ஃபோன்கள், தொலைக்காட்சிகள் அல்லது கேமிங் இயங்குதளங்கள் போன்ற வீட்டு உபயோக சாதனங்களிலும் இதன் தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

விண்வெளி நிறுவனம் செலவு குறைந்த லித்தியம்-அயன் (li-ion) பேட்டரிகளை உருவாக்குவதற்கான அதன் தொழில்நுட்பத்தையும் மாற்றும். மின்சார வாகனங்கள் போன்ற துறைகளுக்கு லி-அயன் பேட்டரிகள் இன்றியமையாதவை என்பதால் போக்குவரத்து அமைப்புகளை பசுமையாக்க இது உதவும். இந்த தொழில்நுட்பம் மூலம் நில அதிர்வு, பூகம்பம் போன்றாவற்றைக் கூட கண்டறிவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இஸ்ரோ உருவாக்கிய பல வண்ணப்பூச்சுகளில் பாலிமர்கள் உள்ளன. இவை, பல்வேறு அமிலங்கள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து வகையான அரிப்புகளிலிருந்தும் உலோகங்களை பாதுகாக்கும்.

"இந்தத் தொழில்நுட்பங்கள், விண்வெளியில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அவற்றைப் பயன்படுத்த அல்லது பிற தொழில்களுக்குத் தங்களின் சொந்தப் பயன்பாடுகளுக்குத் தகவமைத்துக் கொள்ள வழங்கப்பட்டுள்ளன. இதில் உருவாக்கப்பட்டுள்ள சென்சார்கள், போக்குவரத்து துறையில் அதன் விலையை குறைக்க வழிவகுக்கும்" என ஜோதி தெரிவித்துள்ளார்.

- Anonna Dutt

Isro chandrayaan 3

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: