Chandrayaan2 launch has been called off : சந்திரயான் 1ன் அடுத்த படைப்பான சந்திரயான் -2 இன்று அதிகாலை 02.51 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்பட வில்லை என்று இஸ்ரோ இன்று அதிகாலை ட்வீட் செய்தது. எந்த காரணத்தால் திட்டம் கைவிடப்பட்டது என்பதை உறுதியாக இஸ்ரோ நமக்கு அறிவிக்கவில்லை இருப்பினும், ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் மேல் தளத்தில் உள்ள கிரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதியிலேயே திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
A technical snag was observed in launch vehicle system at 1 hour before the launch. As a measure of abundant precaution, #Chandrayaan2 launch has been called off for today. Revised launch date will be announced later.
— ISRO (@isro) 14 July 2019
நிலவில் செயற்கைகோளினை தரையிறக்க ஏற்ற காலநிலையானது 16ம் தேதி வரை மட்டுமே நீடித்து இருக்கும். எனவே சந்திரயான்-2 மறுபடியும் எப்போது விண்ணில் ஏவப்படும் என்பது குறித்து சந்தேகங்கள் நிலவி வருகின்றன. மீண்டும் விண்ணில் ஏவப்படுவதற்கு கிட்டத்தட்ட மாதக்கணக்கில் ஆகலாம் என்று தெரியவருகிறது. கடந்த வருடமே இந்த சந்திரயான் - 2-ஐ விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது இஸ்ரோ. ஆனால் சரியான கால நிலை இல்லை என்ற காரணத்தினால் இரண்டு முறை இந்த நிகழ்வை தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது.
விண்ணில் ஏவப்படுவதற்கு சரியாக 56 நிமிடங்கள் இருக்கும் போது திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மேல் தளத்தில் உள்ள கிரையோஜெனிக் என்ஜினில் திரவ ஹைட்ரஜன் எரிவாயு நிரப்பட்டு தயார் நிலையில் இருந்த போது பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டது.
இஸ்ரோவின் பாகுபலி :
ஜிஎஸ்எல்வி MkIII அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதன் மொத்த எடையானது 4000 கிலோ ஆகும் புவியிலிருந்து 35 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் செயற்கை கோள்களை ஏவ இந்த ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஜிசாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் ஏவி தன்னுடைய முதல் சாதனையை படைத்தது ஜிஎஸ்எல்வி MkIII D1 ராக்கெட். செயற்கை கோளின் எடை 3000 கிலோவாக இருந்தது. கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜிஎஸ்எல்வி MkIII D2 ராக்கெட் 3483 கிலோ எடைகொண்ட ஜிசாட் 29 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சந்திரயான் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 சுவாரசியமான விசயங்கள்
சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்ட உடனே, இரண்டாவது செயற்கைகோளுக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. ரஷ்யாவும் இந்தியாவும் ஒன்றாக இணைந்து இந்த செயற்கைகோளை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல 2010னை இலக்காக கொண்டிருந்தனர். லேண்டரையும் ரோவரையும் ரஷ்யா உருவாக்க, லான்ச்சரையும், ஆர்பிட்டரையும் இஸ்ரோ உருவாக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ரஷ்யா தன்னுடைய ஒத்துழைப்பை திரும்ப பெற்றுக் கொள்ள 2017ம் ஆண்டு லேண்டரையும், ரோவரையும் இஸ்ரோ உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.